???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 3 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   29 , 2019  03:43:15 IST


Andhimazhai Image

உழைப்பின் மேல் நம்பிக்கை வைப்பவன்  நான்... ஆனால் சில சமயம் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. அதிர்ஷ்டம் என்ற சொல்லை நான் இப்படி எடுத்துக் கொள்கிறேன்..சரியான சூழல், காலம். அப்படி எனக்கு வாய்த்தது தான் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின் சந்திப்பு.
 

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் படித்துவிட்டு ஊருக்குச் செல்லாமல் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தேன். சுற்றுகிறேன் என்றால் வெட்டியாக வேலைக்குப் போகாமல் இலக்கியம், சமூக அவலம், இளைஞர்களின் சூழல், முதலாளித்துவம், தொழிலாளர்களின் நலன் என்றெல்லாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
 

அதற்கு உறுதுணையாயிருந்த  நண்பன்தான் அல்போன்ஸ் ராஜா. அவனை ராஜா என்றுதான் அழைப்பேன்.
ராஜாவும் நானும் கவிஞர் முத்துலிங்கத்தின் வீட்டிற்கு சென்று அவரது துணைவியார் உடன் ‘ அம்மா’ என்று அழைத்து வயிறார சாப்பிட்டு விட்டு, பஸ்ஸுக்கு சமயத்தில் காசு வாங்கிக் கொண்டு போவது வழக்கம்.
 

அப்போது நாங்கள் வந்து போவதை சினிமாவுக்கு பாடல் எழுதும் முனைப்பில் இருந்த முத்துலிங்கம் எங்களை கண்டும் காணாமல் விட்டு விடுவார். என்னவோ பிள்ளைகள் போல் வருகிறார்கள் போகிறார்கள் என்பது அவரின் எண்ணமாக இருந்திருக்கலாம்.


அல்போன்ஸ்ராஜா  பண்ணைபுரத்து சகோதரர்கள் இளையராஜா, கங்கை அமரன் பாஸ்கர் அவர்களின் உறவினன். இளையராஜாவின் தாயார் எளிமையாக இவனது வீட்டிற்கு வந்து போவது அன்றைய பழக்கம். கம்யூனிஸ்டு சிந்தனையுள்ள ராஜாதான் எனக்கு அடைக்கலம், ‘அவன் தான் எனக்குஎல்லாம்’ என்கிற நிலையில் எனது மகனுக்கு அவன் பெயரையே  எனது துணைவியார்  செண்பகவடி பாண்டிச்சேரி மருத்துவமனையில் பிறந்த எனதுபிள்ளைக்கு எனக்குத் தெரியாமலே  ராஜா என்று பெயர் சூட்டிவிட்டார்.
 

இது இருக்கட்டும்..இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்த எனது சுதந்திரத்தை முத்துலிங்கம் ஒரு நாள் தட்டிப் பறித்தார், வழக்கமாய் சாப்பிட வீட்டுக்குப்போனோம்.
‘’அம்மா..வாங்கப்பா ‘ என சாப்பாடு போட்டார்கள். பஸ்ஸுக்கு காசு கேட்டோம். அம்மா முத்துலிங்கத்திடம் கேட்க,, அடடா, அன்று தான் நான் சிக்கினேன்.
 

அம்மாவிடம் காசு தராமல் ‘’ஆமா அவனுங்க என்ன பன்றாங்கன்னு இப்படி எங்கிட்ட வந்து காசு கேக்கற’’ என்றார்,
‘’அட.விடுங்க..புள்ளைங்க கேக்குது’’.
’’முதல்ல அவனுங்கள வரச் சொல்லு’’
போனோம். ராஜாவை விட்டுவிட்டார்., என்னை குறுக்குக் கேள்வியால் குடைந்து எடுத்துவிட்டார்.
 

முத்துலிங்கம் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு திரைப்பாடல் எழுதியது எல்லாம் அனைவருக்கும் தெரியும்.
அந்த சமயம்தான் எம்.ஜி.ஆர் முதல்வர். தனக் கென்று சொந்தமாக ‘தாய்’ வார இதழை துவங்கி நடத்த ஆரம்பித்தார்.
 

முத்துலிங்கத்திற்கு எப்போதும் சமூகத்தில் தனிமதிப்புண்டு..என்னைப் பார்த்து ’’ நீதான் தமிழிலக்கியம் படிச்சிருக்கியே…போய் வலம்புரிஜானைப்பார்..வேலை தருவார் வெட்டியா இப்படி சுத்திகிட்டிருக்காதே’ என்று சொன்னார்
’’அட்வைஸ் ஓ.கே..பஸ்சுக்கு காசு’’ என்பது போல் அம்மாவைப் பார்க்க.
அம்மா..’’சரி…போவான் காசு குடுத்து விடுங்க,’’ என்றார்.
 

ஒரு வயதில் அம்மாவை இழந்த  நான் என் வாழ்வில் பல அம்மாக்களைப் பெற்றிருக்கிறேன் என்பதுதான் நிஜம்.
 

அதன் பிறகு முத்துலிங்கம் சொன்னதை மறந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன், சமூக அக்கறை உள்ள இளைஞனுக்கு ஒரு வேலை என்பது ஜெயில்என்கிற கற்பனை எனக்கு,,,கவிதை எழுதுபவனுக்கு கரைகளா? தடையா? என அதீத கற்பனையில் தடுமாறியவன் நான்.
 

என்ன ஞானம் வந்ததோ-நண்பன் ராஜா ‘’டேய் வலம்புரிஜானை போய் பாத்தியா? ’’ என்று சத்தம் போட்டான். அவன் சத்தம்  போட்டால் உச்சபட்ச முடிவு அதுதான் என்றும் அர்த்தம். அதற்குப் பயந்து அன்றே நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள’தாய்’ வார இதழ் அலுவலகத்துள் நுழைந்தேன்.
 

சாப்பாட்டு நேரம். எனக்கோ அகோரப் பசி,,, ஆனாலும் போனேன். பத்திரிகையில் நமக்கென்ன வேலை கிடைக்கப்போகிறது. அதெல்லாம் நமக்குசரிப்பட்டு வராது. நண்பன் கோபித்துக்கொள்கிறானே என்று போனேன்.
 

அந்த வார இதழில் பணியாற்றுகிறவர்கள் வெளியே சாப்பாட்டுக்கு போகிறவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். ’அண்ணா’ பத்திரிக்கை அதே இடத்தில்தான் இருந்தது.
 

இருபது நிமிடம் காத்துக் கிடந்தேன். எவரும் அழைக்கவில்லை. நமக்குத்தான் சுயமரியாதை  சுருக்குப் பையிலேயே கிடக்குமே ! அட.. போங்கப்பா.’’ என்று கிளம்பப் போகும்போது வாட்ச்மேன் ‘’தம்பி உன்னை கூப்பிடறாங்க… போங்க’’ என்றார்.
 

’’அட போய்யா – என்று  தான் ஒரு படி திரும்பியிருந்தால் நான் என்னவாக ஆகியிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. வெறும் கருத்துக்களை மட்டும்வைத்துக்கொண்டு திசை தெரியாமல் சுற்றுகிற பலரை நான் சந்தித்தும்,  கடந்து கொண்டும்தான் இருக்கிறேன்.
 

வாழ்வியல் என்பது வேறுவகையான பொருளாதார நகர்வு என்பதைப் புரிந்து கொள்ள நீண்ட காலம் பிடிக்கிறது சிந்தனையாளர்களுக்கு. சிலருக்கு உடனே புரிந்து கொண்டு புகழின் உச்சியில் சென்று கையசைக்கிறார்கள்..
 

சரி அதை விடுங்கள். விஷயத்திற்கு வருவோம். உள்ளே நுழைகிறேன் இடது புறம் அண்ணா பத்திரிகை, வலது புறம் ‘தாய் வார இதழ்’.
நுழைந்த  இடத்திற்கு பின்னால் எழுத்துக்களை பொறுக்கி அடுக்கி பக்கம் ஆக்குகிற ’கம்போசிங்’ அறை.
 

ஏழெட்டு மேஜை, சேர்கள்- அட...இதுதான் துணை ஆசிரியர் இருக்கை. எதிரே ஒரு அறையில் வவுச்சர்` வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் பணம் கொடுக்கிற கேஷியர் அறை,..
அதைத் தாண்டி- ஆசிரியர் வலம்புரிஜான் எம்.பி. அறை. அழைத்துப் போன தம்பி (அதுதான் வேலையாள்) குமார் கருத்த சிறுத்த பிள்ளை- உள்ளே நுழைந்தபின் அறிமுகம் செய்கிறான்.
’சார்.. பேரு ராசி அழகப்பனாம் ‘’ உங்களை பார்க்க வந்திருக்காரு.,.’
நிமிர்ந்து பார்த்தார்.
 

ஒரு சிங்கம் கனவு கலைந்து நிமிர்ந்து பாத்ததுபோல் இருந்தது. கனத்த குரலோடு ‘’உக்காருங்க’’ என்றார்.
அமர்ந்தேன்.,’’ பத்திரிகைப் பணி பற்றி தெரியுமா?’’
‘’தெரியாது’’
‘’பிறகு ஏன் வந்தீங்க’’
’’எல்லாமே தெரிஞ்சிகிட்டு தானா சார் பிறக்கிறோம்? வேணும்னா தெரிஞ்சிக்கப் போறோம்.’’
உற்றுப் பார்த்தார்..

 


சிறிது நேரம் பேசவில்லை. ஏதோ ஒரு தாளில் எழுதிக் கொண்டிருந்தார். அனேகமாய் ‘தாய்’ வார இதழில் எழுத வேண்டிய ஆசிரியர் பக்கமாக இருந்திருக்கக் கூடும்.
சிறிது நேரம் அமைதி அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது.
மறுபடியும் நிமிர்ந்தார்
‘’சொல்லுங்க’’.


’’ஒரு  நூறு ரூபா கொடுத்தா நான் வார, மாத இதழ்களை வாங்கிப் படித்து விட்டு அலசி ஆராய்ந்து எது தேவை எது இப்ப இருக்கு அப்படிங்கற முடிவுக்கு வருவேன்’’.
‘’சரி..’’ என்று  குமாரை அழைத்து வவுச்சரில் ஒரு நூறு ரூபாய் சஸ்பென்ஸ் அக்கவுண்டில் தரச் சொன்னார். வாங்கிக் கொண்டு  வந்ததும். ’’வேற என்ன’’ என்றார். “போய்வருகிறேன் சார்” என்றேன்
 ‘’போகாதே.. வா..’ என்று சொல்லிவிட்டு ‘நீ பேசும் போது தெரியுது நீ இன்னும் சாப்பிடலை’’. என்றார்.‘’சத்தியமா சாப்பிடலை’’ என்றேன். ‘’குமார். இவரை சாப்பிட வைச்சு கூப்பிட்டு வா.. இவர் பசியோடு உள்ள நெருப்பு’ என அனுப்பினார்.


குமார் சைக்கிளில் அருகில் உள்ள அருண் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக திரும்பி வந்தேன். நல்ல சாப்பாடு.. நமக்கு கிடைக்க வாய்ப்பிருந்து விடுவோமா என்ன- வயிறு நிறைய சாப்பிட்டேன்’’.அருண் ஓட்டல் கீழ் தளத்தில்தான் ‘’வாஷிங்டனில் திருமணம்’’ என்ற நகைச்சுவை தொடரை எழுதிய எழுத்தாளர் சாவியின் அலுவலகம் இருந்தது. அங்கு கூடவே  எழுத்தாளர் மாலன் ஆசிரியராகக் கொண்ட ‘திசைகள்’ பத்திரிக்கை வந்தது.. இதெல்லாம் இப்போது ‘’ஸ்கை வாக்’ என்ற மாலில் மாயமாய் மறைந்துவிட்டது.


வலம்புரிஜானைப் பார்த்தேன். ‘சாப்டீங்களா?’
தலையாட்டினேன்
’’எப்ப வருவீங்க..?’
’இரண்டு நாளில்’
 “வரணும்’’ என்று சொல்லி உற்றுப் பார்த்து விடை கொடுத்தார்.
 

நான் உண்மையாகவே அப்போது வந்துகொண்டிருந்த பிரபல- சாதாரண பத்திரிக்கைகள் வாங்கி அலசி பட்டியல் போட்டேன்.. எத்தனை பக்கம் விளம்பரம். எத்தனை பக்கம் கதை,  சிறுகதை, தொடர், துணுக்கு..கிராமம் சாந்த  படைப்புகள், சினிமா சார்ந்த கட்டுரைகள், ஆண், பெண் உரிமைகள் என்று அலசி பட்டியல் போட்டு எடுத்துக் கொண்டு போய் அவரிடம் நீட்டினேன்.
 

முடிவாக ஒற்றை வரியில் என் கருத்தை எழுதினேன்.பத்திரிக்கைகள் நகரங்களில் வாழ்கிற பிரபலங்களை, வாழ்வை, புகழை, சாதாரண கிராமங்களில் வாசிக்கிறவனின் மூளையை மழுங்கடிக்கின்றன. கிராமங்களின் பங்களிப்பு,  படைப்புகள் இல்லை’’ என்று எழுதினேன்.
அதைப் படித்துப் பார்த்துவிட்டு குமாரை அழைத்து, ‘’இவர் இப்ப இருந்து நமது தாய் வார இதழின் துணை ஆசிரியர் எல்லோருக்கும் சொல்லிடு. ’’இவருக்கு ஒரு டேபுள் சேர் கொடு’’ என்றார்.
 

’’நான் துணை ஆசிரியரா?
பத்திரிக்கைத் துறையில் அரிச்சுவடி தெரியாத நிலையில் துணிச்சலும்,  நேர்மையும் மட்டுமே அச்சாணியாகக் கொண்ட நான் அன்று வலம்புரிஜான் அவர்களின் நம்பிக்கையை பெற்றது எப்படி ?அதுதான் சந்தர்ப்பம். நான் வேலைக்கு என்று சந்திக்கும் வேளையில் ஏதோ ஒரு காரணத்திற்காக சப் எடிட்டர்ஸ் சில பேர் வேலையை விட்டு திடுதிப்பென்று நின்றார்கள்.  அதில் கல்பாண்குமார், ரகுநாத் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
 

அந்த சூழலில் நான் நிழைந்தேன். வலம்புரிஜான் மிகுந்த நம்பிக்கையோடு என்னை அமரவைத்தார்.ஐந்தாண்டு காலம் நான் வாரத்திற்கு பத்து, பனிரெண்டு பக்கங்கள், இலக்கியம், திரை விமர்சனம், கவிதை, போட்டிகள் என வீரியமாய் சுற்றி எழுதினேன்.
 

சில மாதங்கள் ஆபீஸில் அமர்ந்து பணி செய்யாமல் நான் ஆரம்பத்தில் சொன்னேனே.. ‘’கிராமப் படைப்புகள், அவர்களது பங்களிப்பு’’ இல்லை என்று.... அதை நிவர்த்தி செய்ய தமிழகம் எங்கும் பயணம் செய்து நேரில் சந்தித்து கவிதை, பேட்டி, சேவையாளர்கள் என படைப்புகளை அனுப்பினேன். ஊக்கமளித்தேன்.


கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துகிற இதழ்களை அறிமுகம் செய்து தனிப்பகுதி எழுதி ஊக்கப்படுத்தினேன்.
 

அப்போது அறிமுகம் ஆனவர்கள் தான் இன்றைய ‘உதயம்’ ராம், ’செந்தூரம் ஜெகதீஷ்,  ’மெளனம்’ ரவி, பெரு துளவி பழனிவேல் போன்றோர்.
அப்போது என்ன விஷயம் என்றால்- எம்ஜிஆர் வியாழனன்று பத்திரிகை வெளிவருமுன் படித்துவிட்டு கருத்து சொல்வார். ஆர்.எம்.வீ, பொன்னையன், செல்வி. ஜெயலலிதா, கே.ஏ. கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கும்  வெளிவரும் முன்பாகவே சென்றுவிடும்.
 

ஜெகத்ரட்சகன், சைதை துரைசாமி யெல்லாம் அபோது’ தாய்’க்கு  நெருக்கம். அறிமுகம் அழகியலாய் துவங்கிய காலம்.


வலம்புரிஜானுக்கு ஒரு பழக்கம் உண்டு, இளைஞர்களை நம்புவது, சுந்திரமாய் செயல்பட விடுவது. நம்பிக்கையுடன் உற்சாகப்படுத்துவது. அதை அவர் சரிவர செய்தார்.
 

எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பார். அது நன்றாக உள்ளது என்றால் உடனே எழுதிவிடுவார். இல்லையேல் மேடைகளில் எடுத்துச் சொல்லி மகிழ்வார்.
 

பாலகுமாரன் தொடர் ஒன்று எழுத வரும்போது என்னை கதை கேட்டுபோடலாமா என்று முடிவு செய்யச் சொன்னார்.அவர் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கான இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்ற  பேச்சாளராக இருந்தார். தாய் அனைவரும் விரும்பும் பத்திரிகையாக- குறிப்பாக இலக்கியம் மனம் படைத்த இளைஞர்களின் மனதை வெகுவாக ஈர்த்தது.
 

ஒரு சம்பவம் சொல்கிறேன். பாரதிதாசனின் அடியொற்றிய கவிஞர் முல்லைச்சரம் பொன்னடியான் அப்போது கடற்கரை கவியரங்கம் நடத்திக் கொண்டிருந்தார்.


மாதம் முதல்வாரம் சனியோ, ஞாயிறோ நினைவில்லை கடற்கரையில் அதாவது கண்ணகி சிலைக்குப் பின்புறம் வட்டமாக கவிஞர்கள் அமந்து ஒருவர் தலைமை தாங்கி புதிய, பிரபல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அரங்கேற்றுவார்கள். பொதுவாக மின்விளக்கு வெளிச்சத்தில் நடக்கும். சில சமயம் டைனமோ-சைக்கிள் பெடலை ஒருவர் மிதித்து வெளிச்சம் கூட்ட அந்த வெளிச்சத்தில் கவிஞர்கள் மாறி,மாறி கவிதை படைப்பார்கள். முடிய ஒன்பது மணி ஆகிவிடும். இந்த இருட்டில் படித்தவர் முகம் தெரிகிறதோ,  தெரியவில்லையே,’ சபாஷ்’ ‘பலே’ என்று குரல்கள் கைத்தட்டல்களோடு வரும்.
 

நானும் அவ்வாறு சலித்துகொண்டு கவிதை படித்தவன்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதில் என்ன பயன்? இருட்டில், கடற்கரையில் தங்களுக்குள்ளே கவிதை படித்துக் கொண்டு, கைதட்டிக் செல்வதில் என்ன லாபம்? இதனால் சமூகத்திற்கு என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது.
மக்கள்முன் தெருவோ, கிராமமோ, மக்கள் கூடுமிடமோ, இதைச் செய்தால் பலன் உண்டு. அதை விட்டு விட்டு இது எதற்கு? என்று கடுமையான எனது பார்வையை அலசல் என்ற பக்கத்தில் எழுதினேன்.
 

’அலசல்’ என்றால்- பார்த்தது, படித்தது, நெகிழ்ந்தது-என்ற மூன்று கோணங்களில் எழுதிக் கொண்டிருந்தேன்.
அதை அப்படியே தாயில் வர பொன்னடியான், வா. மு சேதுராமன், பெங்களுர், டெல்லி, பம்பாய், என நிறைய சங்கங்களிலிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
 

இரண்டு, மூன்று வாரங்கள் அந்த எதிர்ப்பை தாயில் பிரசுரிக்க அனுமதித்தார். ஆனாலும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
வலம்புரிஜான் ஆசிரியர் அழைத்து  ‘’உன் முடிவு என்ன? என்றார்.
 

’’சரி என்பதை மட்டும்தான் எழுதியுள்ளேன். இது என் சமூகக் கருத்து தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை’’
நிமிர்ந்து உற்றுப் பார்த்து. ‘’இது தான் சரி.’ நீ போ’’ என்று சொல்லி விட்டு எனக்கு ஆதரவாக எழுதினார்.
அதுதான் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்.
 

சோவியத் கலாச்சார மையத்தில் நடைபெற்ற எனது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் (கதவைத்திற காற்று வரட்டும்).என்னை வெகுவாகப்பாராட்டினார்.
 

‘’தமிழால் இவன் வாழ்கிறானோ இல்லையோ, தமிழை இவன் வாழவைக்காமல் விடமாட்டான்’’ என்று உச்சஸ்தாயில் தனக்கே உரித்தான உவரித் தமிழில் உரையாற்றினார்.
 

அவரின் சோவியத் பயணத்திற்கு நான் வித்திட்டது என்பது தனிச் செய்தி. அதை சோவியத்  சென்று சென்னை விமானநிலையம் திரும்புகையில் எல்லோரும் அவருக்கு மாலையிட, அவர் ‘’இதற்கு காரணமானவன் நீ’’ என்று எனக்கு மாலையிட்டு உயர்ந்த குணத்தை வெளிப்படுத்தினார்.
எண்பதுகளின் உச்சத்தில் வலம்புரிஜான்தான். அவரின் வார்த்தைகளில் வசீகரமும், தன்னம்பிக்கையும், வானவில்  போன்ற வண்ணச் சித்திர சொற்களும் மழை போல் பொழியும்.
 

டி.சி ஜான் என்ற பெயரில் 1946ல் உவரியில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழ்மையில் பிறந்த வலம்புரிஜான் இருமுறை ராஜ்யசபா உறுப்பினராக வலம் வந்தார்.
பனிரெண்டு ஆண்டுகள் தாய் வார இதழின் தன்னிகரில்லா ஆசிரியர் பணி-இதனிடையே தன் வாழ்வின் முத்திரையாக எழுபத்திரண்டு நூல்கள் எழுதினார். ஐந்து ஆங்கில நூல்கள்.
 

இலங்கை வசீகர வர்ணனையாளர் ஒரு விழாவில் வலம்புரிஜான் அவர்கள்’’கர்ணன் கவசகுண்டலத்தோடு பிறந்தான், வலம்புரிஜான் நூல்கட்டுகளோடு பிறந்தார் ‘’ என பாராட்டினார்.
 

சட்டம் படித்த வலம்புரிஜான் ‘’இந்த நாள் இனிய நாள்’’ என்று சன் தொலைக்காட்சியில் நாளும் ஒரு செய்தி சொன்னார். ஆயுர்வேத சிகாமணி என்ற அளவில் மருத்துவ குணம் கொண்ட இயற்கை வாழ்வியலை முன்னிறுத்தினார்.
 

கண்ணதாசன் அவர்களைப் போலவே வலம்புரிஜான் அவர்களுக்கும் அரசியல் நிலைத்ததாயில்லை. ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னது போல்
’ சிந்தனையாளன் ஒரு கட்டுக்குள் இருக்கமாட்டான். அவன் சுதந்திரமான சிந்தனை உள்ளவன்’ என்பதே நிகழ்ந்தது.
 

திமுக, அதிமுக, மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், பின் மதிமுக என்று தன்மனம் தனக்குச் சொன்ன திசைகளில் பயணித்தார்.திரையுலகம் அவரை வெகுவாக கவர்ந்ததா? இல்லை நாம் இதில் முத்திரை பதிக்க வேண்டுமென்று நினைத்தாரோ தெரியவில்லை. 1988ல் ’அது அந்தக் காலம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். பானு ரேவதி கம்பைன்ஸ் என தொடங்கி சந்திரபோஸ் இசையில் சரண்ராஜ், லஷ்மி, சரத்பாபு போன்றவர் நடிக்க வெளிவந்தது.
 

அவர் நினைத்தபடி சினிமா அவருக்கு பெருமைதேடித்தரவில்லை.ஆனால் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று தனிப்பெரும். ஆளுமைகள்.


தாய் பிரபு, பழனி பாரதி, கல்லாடன், பாபநாசம் குறள் பித்தன், ஆர்.சி.சம்பத், தராசு ஷ்யாம், குடந்தை கீதப்பிரியன், நக்கீரன் கோபால், சூர்ய காந்தன், இதயக்கனி விஜயன், இன்னும் பல ஆளுமைகளைக் குறிப்பிடலாம்.
 

’அந்தக இரவில் சந்தன மின்னல்’ என்று காஞ்சிப் பெரியவர் பற்றி நூல் எழுதியதாகட்டும்,  பாரதியார் பற்றிய நூலாகட்டும். ’நான் கழுதையான் போது’ என்ற விமர்சன வாழ்வியல் நூல் எழுதுவதாகட்டும், அனைத்திலும் தனித்துவமான தமிழ் சொற்களின் கூட்டணித்தலைவனாக இருந்தார்.


ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அண்ணாவுக்குப்பின் வலம்புரிஜான் இதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. இவர் தமிழால் கலைஞரும், எம். ஜி ஆரும் ஈர்க்கப்பட்டார்கள் என்பதே நிதர்சனம்.
 

ராஜாளிப் பறவையாக இலக்கிய வானில் பறந்த வாழ்வு, பொருளாதார நெருக்கடி, உடல் நலக் குறைவினால் பின்னடைவு அடைந்து மறைந்தார் என்பது செய்தியாக பின்னாளில் உணரப்பட்டது.
 

மறைந்த செய்தி கேட்டு நான் உடைந்த அந்த தருணம் ஒரு உயர்ந்த மனிதனின் வாழ்வு எவ்வாறு இப்படி மாறுகிறது என்பதை புரிந்த தருணம்.


திருமாவளவன், வாசன், வைகோ போன்றறோரை தொடர்பு கொள்ள உடனே வந்து பார்த்து அஞ்சலி செலுத்தினார்கள். வைகோ அவர்கள்தான் அண்ணா சமாதியில் தொடங்கி பேரணியாக, சாந்தோம் அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்து அஞ்சலி செலுத்த துணையாக இருந்தார்.
அரசியல் சூழலில் அப்போதைய அதிமுக மெளனம் காத்தது. காலத்தின் மாற்றத்தை எவர்தான் என்ன செய்ய முடியும்?
ஒன்று நினைவுக்கு வருகிறது. காலத்தின் சுழற்சியில் யாவரும் சுழல்பவர்களே. நிலைத்தது என்று எதுவுமில்லை.
விதைத்தது வீண்போகாது. அந்த சொற்களுக்கு முழு முதற் காரணமாய் இருந்தவர்தான் வலம்புரிஜான்.
 

இந்த வலம்புரிஜானின் சமாதியை செலவு செய்து பராமரிப்பவர் உறவினர் அல்ல - அவர் தமிழால் ஈர்க்கப்பட்ட கோவை இளைஞர் கிருஷ்ணகுமார்தான். உண்மையில் வலம்புரிஜான் தன்நம்பிக்கையின் தாய்..தாயின் கருப்பை என்றே சொல்லலாம்.
 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...