அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 115 
|
நரிக்குறவர் பெண்ணுடன் சாப்பிட்ட அமைச்சர்!- கோவிலில் நடந்தது என்ன? முழு தகவல்கள்
Posted : சனிக்கிழமை, அக்டோபர் 30 , 2021 18:05:35 IST
“மிச்ச மீதி கொடுக்குறதுக்கு உங்க கல்யாணமா”, “கோவில்ல போடுற அன்னதானம் தானே, இந்த மாதிரி ஏன் பிரிச்சு பாக்குறீங்க?” “குறிகாரிச்சினா உங்களுக்குக் கேவலமா போச்சா?” என தனக்கு இழக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பொதுச்சமூகத்தின் முகத்தில் அறைவது போன்ற கேள்வியை எழுப்பியிருந்தார் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி.
யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த வாரம் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் பேசிய பெண் ஒருவர், தான் ஒரு நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே தனக்கு கோவில் அன்னதான பந்தியில் அனுமதி மறுக்கப்பட்டதாகப் பேசியிருந்தார். அவரின் ஆதங்கத்திற்கு ஆறுதல் கிடைக்கும் விதமாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் செயல்பாடு அமைந்திருக்கிறது. நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் சேகர்பாபு, பூஞ்சேரி நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த அஸ்வினியுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கை கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
அமைச்சர் சேகர்பாபுவுடன் நேற்று ஆய்வுப் பணியில் கலந்து கொண்ட, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜியிடம் இதுகுறித்து பேசினோம், “கோவில் அன்னதானத்தை சாப்பிட சென்ற போது தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பந்தியில் அமர்ந்திருந்தவர்களை எழுப்பி அனுப்பியதாகவும் பெண் ஒரு புகார் தெரித்திருந்த வீடியோவை கடந்த வாரம் பார்த்தேன். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவலாகப் பகிரப்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த பிரச்சனை என்னுடைய தொகுதியில் நடந்தது என்பதாலும், உடனே அதை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் கொண்டு சென்றேன். அதற்குள்ளாக இந்த பிரச்சனையானது, முதலமைச்சரின் அலுவலகத்திற்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் சென்றுவிட்டது.
இதற்கிடையே, இந்த பிரச்சனை தொடர்பாக நானே விசாரித்தேன். பொதுவாக கோவில் இருக்கின்ற பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் கோவில் நிகழ்வுகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள். அந்த கோணத்திலும் இந்த பிரச்சனையை விசாரித்துப் பார்த்தேன். தன்னை யார் விரட்டினார்கள் என்பது தொடர்பாக அஸ்வினி தெளிவான தகவல்களைக் கூறவில்லை.
இதனைத் தொடர்ந்து, இணை ஆணையரிடம் இந்த பிரச்சனையைக் கொண்டு சென்றேன். அந்த பெண்ணின் குற்றச்சாட்டுத் தெளிவாக இல்லாமல் இருப்பதால் இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்க வேண்டாம் எனவும், தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிறைய பிரச்சனைகள் இருப்பதால், இதுபோன்ற பிரச்சனைகளை எல்லாம் அரசு கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிப்போம் என்று முடிவு செய்தோம். அதற்குள்ளாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிடுவதற்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்ததாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, ஸ்தலசயன் பெருமாள் கோவிலுக்கு அமைச்சர் வருவது உறுதியான நிலையில், மதிய உணவுக்கு அங்கு செல்லாம் என முடிவெடுத்தோம். அஸ்வினியும் கோவில் இருக்கின்ற பகுதியை சேர்ந்தவர். அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் நரிக்குறவர் மக்களுடன் சேர்ந்து நேற்று மதியம் உணவு உட்கொண்டோம். அது தொடர்பான புகைப்படம் தான் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றவர், தொடர்ந்து பேசினார்.
“இந்த பிரச்சனையை அரசு உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டது, அறநிலையத்துறை அமைச்சர், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் நரிக்குறவர் சமூகத்துடன் சேர்ந்து உணவு உட்கொண்டது ஒரு சமிக்ஞை. அது என்ன சமிக்ஞை என்றால் மற்ற கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அதன் மீது அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் என்பது தான்.” என்றவரிடம். மேலும் ஒரு கேள்வியை முன்வைத்தோம், அஸ்வினியை பந்தில் அமர்ந்து உணவு உட்கொள்ளாமல் விரட்டி அடித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றோம்.
அதற்குப் பதிலளித்தவர், “இந்த கோவில் நிர்வாகத்தை கடும்பாடி கோவில் நிர்வாகி கவனித்து வருகிறார். இந்த பிரச்சனை நடந்த பிறகு ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு என்று தனியாக நிர்வாகி ஒருவரை நியமிப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாகிகளா? அல்லது வெளி ஆட்களா? என்பது குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சனையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தால், அரசு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபர்கள் யாராவது ஈடுபட்டிருந்தால், அவரின் குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவரின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் யார் இந்த பிரச்சனையில் ஈடுபட்டார்கள் என்ற விவரம் வந்துவிடும்.” என்றவர், சாப்பிட்டு முடித்தவுடன் அமைச்சரிடம் அஸ்வினி வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை வைத்தார் என்றார்.
பாதிக்கப்பட்ட அடிநிலை மக்களுடன் ஓர் அரசு நிற்குமானால் அதுதான் சிறந்தது என பாராட்டுகள் குவிகின்றன. 'தரமான சம்பவம்' நிகழ்த்திய அனைவருக்கும் பாராட்டுகள்.
- பிரகாஷ்
|
|