கே.எஸ். சேது மாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம் - கமல்ஹாசன் இரங்கல்!
Posted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 24 , 2021 14:50:42 IST
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்தவர் இயக்குநர் கே.எஸ். சேது மாதவன் என அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் கே.எஸ். சேது மாதவன் காலமானார். அவருக்கு வயது 90.
ஓடையில் நின்னு, மறுபக்கம் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களை சேது மாதவன் இயக்கியுள்ளார். ஏரளமான மலையாளப் படங்களை இயக்கியதோடு தமிழ், ஹிந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். சிறந்த இயக்கத்துக்காக 4 விருதுகள் உள்படம் 10 தேசிய விருதுகளையும் 9 கேரள அரசின் விருதுகளையும் பெற்றார். 2010-ல் மலையாளத் திரையுலகின் பங்களிப்புக்காக கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருதைப் பெற்றார்.
1931-ல் பாலக்காட்டில் பிறந்த சேது மாதவன், கடந்த சில வருடங்களாக சென்னையில் வசித்து வந்தார். சேது மாதவன் இயக்கிய தமிழ்ப் படமான மறுபக்கம், 1991-ல் சிறந்த படமாகத் தேசிய விருது பெற்றது. இந்த விருதைப் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றது. மலையாளத் திரையுலகில் கமல்ஹாசனை அறிமுகம் செய்த பெருமையும் அவருக்கு உண்டு. கடைசியாக 1995-ல் படம் இயக்கினார்.
சென்னையில் வசித்த வந்த கே.எஸ். சேது மாதவன், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு மனைவியும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளார்கள். சேது மாதவனின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
கே.எஸ். சேது மாதவன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் கூறியதாவது: காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ். சேது மாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச் சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவைக் கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் என்று கூறியுள்ளார்.