அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   15 , 2019  12:03:35 IST

 
ந்திமழை வெளியிட்ட  தமிழ்ப் பதிப்புலகச் சிறப்பிதழுக்காக காலச்சுவடு  பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பதில்களிலிருந்து ...
 
 
 காலச்சுவடு பதிப்பகத்தை நடத்தத்தொடங்கியதில் இருந்து இன்றுவரை தமிழ்ப் பதிப்புலகில் ஏற்பட்டுவரும் மாறுதல்களைக் கவனித்திருப்பீர்கள். அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
 
அக்காலகட்டத்தில்(1995) பல நம்பிக்கைகள் இருந்தன. நூறு ரூபாய்க்கு அதிகமான விலையுள்ள நூல்கள் விற்பனையாகாது, ஆராய்ச்சி நூல்களைப் பொது வாசகர்கள் வாங்கமாட்டார்கள் என்பன போன்று. (விபிபி இல்லை என்று மெனக்கட்டு அறிவிப்பார்கள்). இத்தகைய நம்பிக்கைகள் எல்லா காலகட்டங்களிலும் எல்லாத் துறைகளிலும் இருக்கும். இவை நாம் எதிர்பார்ப்பதுபோல அனுபவத்திலிருந்து கிளர்ந்தவை அல்ல. முதலில் ஒரு நம்பிக்கை உருவாகிறது. இது பெரும்பாலும் மக்கள் பற்றிய கீழான கணிப்பிலிருந்து உருவாகிறது. பின்னர் அந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப அத்துறை சார்ந்த உயர்குழு செயல்படுகிறது. இப்படியான தனது நம்பிக்கைகளை மக்கள் மீது திணித்து அவற்றை ' உண்மை' ஆக்கித்  தனது நம்பிக்கைகளுக்கு வலு சேர்த்துக்கொள்கிறது. 
 
மக்கள் மோசமான ரசனையுடையவர்கள் என்ற அனுமானத்தில் தொடங்கி மோசமான உள்ளடக்கமுடைய நூல்களை, இதழ்களை அவர்களுக்கு வாசிக்கக் கொடுத்தால் அவர்கள் மோசமான ரசனைக்குப் பழகிவிடுவார்கள், இல்லையா?  இதுதான் தமிழ் பதிப்புத்துறையிலும் நடந்தது! கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கணிசமான வாசகர்கள்  இலக்கியத்தையும்  விரும்பிப்படிப்பார்கள், நல்ல இதழ்களையும் விரும்புகிறார்கள் என்பது உறுதிப்பட்டுள்ளது.
 
காப்புரிமை பற்றிய விழிப்புணர்வு பொதுவாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இல்லாமலே இருந்தது. 2000 க்குப் பின்னர் மையம்கொண்ட புதுமைப்பித்தன் காப்புரிமை பிரச்சனை இதில் மிகப்பெரிய உடைவை ஏற்படுத்தியது. இன்று ஒரு எழுத்தாளரின் காப்புரிமைக்கு எதிரான ஒரு பிரச்சனையைக் கிளப்பவே முடியாது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட தமிழத்தின் பல முற்போக்குச் சிந்தனையாளர்கள் எவ்வளவு அபத்தமாக செயல்பட்டார்கள், எப்படி புதுமைப்பித்தன் குடும்பத்தின் காப்புரிமைக்கு எதிராகத் திரண்டார்கள் என்பதை இன்று நம்பமுடியாத அளவுக்கு சூழல் மாறியுள்ளது.
 
நூல்களுக்கு உரிமை வாங்கி மொழிபெயர்ப்பது முன்னர் ஒரு அதிசயமாக இருந்தது. இன்று ஓரளவுக்குப் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. சென்னை புத்தகச் சந்தை இந்தியப் புத்தக சூழலில் ஒரு முக்கிய நிகழ்வாக வளர்ந்துள்ளது. இன்னும் பலவும் சொல்லலாம்.
 
 
தமிழ்ப் பதிப்புலகில் நிலவிய ஒருவிதமான நம்பிக்கையற்ற தன்மையை உடைத்து தரமான நூல்கள், சிறந்த உருவாக்கம் ஆகியவற்றுக்கு மதிப்புள்ளது என்று காட்டியிருக்கிறீர்கள்.. இந்த நிகழ்வு எப்படி நடந்தது? இது தொடர்பான சுவாரசியமான சில சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
இதுபோன்ற மாற்றங்கள் ஒரு நிறுவனத்தாலோ ஒரு தனிநபராலோ ஏற்படுவதில்லை. தரமான நூல்களை சக்தி, வாசகர் வட்டம், க்ரியா, அன்னம் போன்ற பல பதிப்பகங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்தன. இத்தாக்கம் காலச்சுவடுக்குப் பிறகு இன்னும் பரவலானது. தரமான பதிப்பகம் நடத்துவது ஒரு தியாகச்செயல்பாடாக இருந்த நிலை மாறியுள்ளது. வியாபாரி என்பதை ஒரு வசைச்சொல்லாக மாற்றி, அதை எனக்கு முத்திரையாக குத்தி ஓரங்கட்ட முயற்சிகள் நடந்தன. தொழில்திறனுடன் செயல்படுவதற்கான பதக்கமாக அதை எடுத்துக்கொண்டேன். வெகுஜன நூல்களை வெளியிடாமல் காலச்சுவடு நிலைபெற்றது, வளர்ந்தது என்பது முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது.
 
தமிழ் நூல்களைக் கையில் வைத்திருக்க  வாசகர் இப்போது வெட்கப்படும் நிலையில் நூல் தயாரிப்பு இல்லை என்பது முக்கியமான மாற்றம். நல்ல தயாரிப்பு முக்கியமில்லை, உள்ளடக்கத்திற்கு மதிப்பில்லை, குறைந்தவிலை மட்டுமே விற்பனையைத் தரும் என்பது ஒரு பக்க நம்பிக்கையாக இருந்தது. மறுபக்கம் வாசகரைக் கருத வேண்டியதில்லை; உலகத்தரத்தில் நூலைத் தயாரித்து உயர்ந்த விலை வைத்துத் தகுந்த வாசகன் தேடிவரக் காத்திருக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் இருந்தது. நூல் மலிவான பொருள் அல்ல. உலகத்தரம், வாங்கும் சக்திக்கு அப்பால் நூல்விலையைக் கொண்டு நிறுத்தும். இது தமிழ்ச்சூழலின் அவலம் பற்றிய புலம்பல் தழைக்கவே வழிவகுக்கும். நல்ல தயாரிப்பு, அதற்குரியவிலை, வாசகரை ஈர்க்கும் திட்டங்கள்,  வாசகர் நம்மைத்தேடி வர காத்திராமல் வாசகரைத்தேடிச் செல்லும் வேகமான சந்தைப்படுத்தல் என்று செயல்பட்டது காலச்சுவடு. விபிபியில் நூல்களை எங்கள் செலவில் அனுப்புவதாக அறிவித்தோம். அந்த ஒரு வழிமுறையில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு நூல் விற்பனையாகிறது.
 
எல்லாவற்றிலும் சுவாரசியம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். சுவாரசியம் இருக்கவுமில்லை. ஆர்வம் இருந்தது; மன நிறைவு இருந்தது; சோர்வு இருந்தது; அனுபவம் இருந்தது; நெருக்கடி இருந்தது; மானம் இருந்தது; அவமானமும் இருந்தது.
 
நம்பிக்கையற்ற நிலையிலிருந்து ஊக்கம்தரும் நிலைக்கு எல்லோரும் விரும்பிப் பயணிப்பார்கள் என்று தோன்றும். உண்மை அதுவல்ல. தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது. நிலைமையை மேம்படுத்திப் புலம்பும் இன்பத்தைப் பறித்தவர்களைச் சிலர் மன்னிக்கவே மாட்டார்கள். தமிழ்ச் சூழலைப் பற்றி புலம்பும் வாய்ப்பைக் காலச்சுவடு குறைத்தது என்பது பெரிய அளவுக்கு வருத்தத்தையும் வெறுப்பையும் எங்களுக்குப் பெற்றுத்தந்தது. இதன் காரணமாக சில உறவுகளை இழந்துள்ளோம்.
 
ஒரு பொது அரங்கில் ஆளுமை ஒருவர் தன்னிடம் அரிய பல ஆவணங்கள் இருப்பதாகவும், தன்னால் அதை இந்த அவலமான தமிழ் சூழலில் வெளியிட அவசியமான பணத்தைப் புரட்ட முடியவில்லை என்றும் ஆவேசமாகப் பேசினார். இது பல ஆண்டுகளாக அவர் பேசிவந்த விஷயம். நான் எழுந்து ஆவணங்களைப் பதிப்பாசிரியராக இருந்து தயார்செய்யுங்கள், வெளியிடும் பொறுப்பை நான் எடுத்துக்கொள்கிறேன். அது காலச்சுவடு வழிதான் வெளிவரவேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்று சொன்னேன். பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு எந்தப்பேச்சும் இல்லை. அந்த ஆவண பொக்கிஷத்திலிருந்து ஒரு தாள்கூட இதுவரை வெளிவரவில்லை. ஆனால் உறவு முறிந்துவிட்டது.
 
  
உங்கள் பதிப்பகத்தில் அதிக உழைப்பைக் கோரி, அதன் பின்னர் வெளியாகி வெற்றி பெற்ற நூல்கள் சிலவற்றைப் பற்றி?
 
ஆரம்பகட்டத்தில் வெளிவந்த மூன்று நூல்கள் பற்றிச் சொல்லலாம். மொத்தத்தில் பல நூல்கள் கடும் உழைப்பால் உருவானவை.
 
1. ஜி. நாகராஜன் படைப்புகள்( 1997). நாகராஜன் படைப்புகளைத் தொகுக்கப் பலரும் உதவினார்கள். முழுவிபரங்கள் பதிப்பாசிரியர் சி. மோகன் முன்னுரையில் உள்ளது. நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர்  கிடைத்த 
ஜி. நாகராஜனின் பல தமிழ் ஆக்கங்களையும் ஆங்கில எழுத்துகளையும்  சேர்த்து மேம்படுத்தி ஜி. நாகராஜன் ஆக்கங்கள்(2007) என்னும் தொகுப்பை ராஜமார்த்தாண்டன் பதிப்பித்து வெளியிட்டோம். இதுபோன்ற பணிகளுக்கு முடிவில்லை. தொகுக்கப்படாத சுராவின் படைப்புகள்கூட அவ்வப்போது கிடைத்துவருகின்றன.
 
2. அன்னை இட்ட தீ, புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளில் தொகுப்பு (1998). இந்நூலும் பலரது ஒத்துழைப்புடன் 
ஆ. இரா. வேங்கடாசலபதியால் பதிப்பிக்கப்பட்டது. இதில் உதவியவர்களுக்கும் பங்களித்தவர்களுக்கும்  நன்றி அறிவிக்க சலபதி முன்னுரையில் ஐந்தாறு பக்கங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். இந்நூல் மிக வேகமாக விற்பனையானாலும் புதுமைப்பித்தன் முழுப்படைப்புகளையும் தொகுத்து வெளியிடும் பணியைத் தொடங்கியதால் மறுபதிப்பு வெளியிடாமல் நிறுத்திவிட்டோம்.
 
மேற்படி இரண்டு நூல்களுமே விற்பனையைத் தாண்டி, காலச்சுவடு பதிப்பகத்திற்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தின. ஓர் எழுத்தாளரின் படைப்புகளைத் தேடியெடுத்துத் தொகுத்து முழுமையாக வெளியிடும் பணிக்கு இவை முன்னோடி முயற்சிகள்.
 
3. சீன மொழி : ஒரு அறிமுகம்.( 2004)
 
பயணியின் இந்த முயற்சி அதுவரை வெளிவந்த காலச்சுவடு நூல்களில் தனித்துவமானது. அயலுறவுத்துறையில் பணியாற்றும் பயணி பைஜிங்கில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்திச் சீன மொழியைக் கற்றார். தமிழ்வழி சீன மொழியைக் கற்கவும் அறியவும் ஏதுவாக இந்நூலை உருவாக்கினார். (உண்மையில் இத்தகைய நூலை சிங்கப்பூர்/ மலேசியத் தமிழர் உருவாக்கியிருக்க வேண்டும்). சிறிய நூல்தான் எனினும் இந்நூல் பிரதியைத் தயாரிக்க பயணி பெரிய உழைப்பைச் செலுத்தினார். இந்நூலை வடிவமைக்க பயணியும் காலச்சுவடுவும் இணைந்து கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம். சீன எழுத்துக்களையும் ஒலிவடிவ அமைப்புகளையும் உள்ளடக்குவது அன்று பெரும் சவாலாகவே இருந்தது.
 
பின்னர் காலச்சுவடு வெளியிட்ட பல மொழி/ இலக்கணம் நூல்களுக்கு இந்நூல் ஒரு முன்னோடியாக அமைந்தது.
 
 
புனைவு இலக்கியத்துக்கான வரவேற்பு தமிழ் வாசகர்களிடம் எப்படி உள்ளது? கட்டுரை நூல்களுக்கு வரவேற்பு அதிகமா?
 
இது பதிப்பகத்திற்குப் பதிப்பகம் வேறுபடும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பதிப்பகத்தின் சிறப்பம்சமும் என்ன என்பதுபற்றி வாசகருக்கு ஒரு கணிப்பு உள்ளது. அதனடிப்படையிலேயே அவர்கள் நூல்களைத் தேர்வு செய்கிறார்கள். காலச்சுவடைப் பொறுத்தவரை புனைவுகள், கட்டுரை இலக்கியம், ஆய்வுகள் நல்ல கவனம் பெறுகின்றன.
 
 
பிஓடி எனப்படும் தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அது பற்றிய உங்கள் கருத்து?
 
ஜெர்மனியில் பாத் ஹெர்ஸ்ஹெல்ட் (Bad Hersfeld) என்னும் ஊரில் முதல் பிரிண்ட் ஆன் டிமாண்ட் பதிப்பகம் உருவானது. 2007இல் அந்த நிறுவனத்திற்கு ஒரு குழுவாக பதிப்பாளர்கள் பலர் சென்றிருந்தோம். ஒரு நூல் அச்சாக அதன் பின்னால் ஓடினோம். 12 நிமிடத்தில் ஒரு பிரதி வந்து விழுந்தது. பெரும் அதிசயமாக இருந்தது.
 
ஜெர்மனியில் நூல் விநியோகம் சிறப்பாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் புத்தகக் கடைகள் உள்ளன. ஒரு வாசகர் ஜெர்மனியின் ஒரு மூலையிலிருக்கும் கடைக்குச் சென்று நூல்களை வேண்டுகிறார். அவற்றில் சில கையிருப்பில் இல்லையென்று கொள்வோம். கடைக்காரர் நாளை காலை ஒன்பது மணிக்கு வாருங்கள் என்று பதிலளிக்கிறார். பின்னர், ஒரு பத்துப்பதினைந்து புத்தகங்களுக்கான ஆர்டரை விநியோகிப்பாளருக்கு அனுப்புகிறார்.
(பதிப்பாளர்கள் நூல்களை நேரடியாக விநியோகிப்பதில்லை.)
 
ஆர்டர் மாலை ஏழுமணிக்கு மின்னஞ்சலில் விநியோகிப்பாளருக்கு வருகிறது. பாத் ஹெர்ஷேல்டு ஊரில் ஒரு பெரிய தொழிற்சாலைபோல இருந்த நூல் விநியோக நிறுவனத்திற்கும் சென்றிருந்தோம். ஏழுமணிக்கு வரும் ஆர்டருடன் நள்ளிரவில் ஒரு சரக்கு வண்டி கிளம்பிவிடும். பாத் ஹெர்ஸ்ஹெல்ட் ஜெர்மனியின் மையத்தில் உள்ளது. நாட்டின் எந்தவொரு மூலையையும் நான்கு மணிநேரத்தில் நெடுஞ்சாலைகள் வழி எட்டிவிடமுடியும். அதிகாலையில் நூல்கட்டு கடைவாசலில் விழுந்துவிடும்.
 
இப்போது தமக்கு வரும் ஆர்டரில் குறிப்பிட்ட சதவீதம் அச்சில் இருப்பதில்லை என்பதை விநியோகிக்கும் நிறுவனம் கவனிக்கிறது. விற்பனை குறைந்ததும் பதிப்பாளர்கள் அச்சிடுவதை நிறுத்திவிடுகிறார்கள். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள் அந்த நூல்களைத் தொடர்ந்து தேடுகிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு விடையாக அவர்கள் Print on Demand முறையைத் தொடங்குகிறார்கள். அதற்கான அச்சு இயந்திரத்தையும் உருவாக்குகிறார்கள்.  பதிப்பாளர்களிடமிருந்து மென் பிரதியை வாங்கி சேமிக்கிறார்கள். அவற்றை இணையத்தில் பட்டியலாக வெளியிடுகிறார்கள். ஒரு நூலுக்கு ஆர்டர் வந்ததும் ஒரு நூலை அச்சடித்து அனுப்பிவிடுவார்கள். பதிப்பாளருக்கு வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தைக் கொடுக்கிறார்கள்.  இப்போது எல்லா நூல்களுமே  வாசகருக்குக் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. ஒரு நூல் கையிருப்பில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நூலின் ஒரு பிரதியை அச்சிட்டு வாசகருக்கு அனுப்பிவிட முடிகிறது.
 
ஒரு சூழலில் ஒரு காரணத்திற்காக உருவான தொழில்நுட்பம் வேறு பல சூழல்களில் தேவைக்கேற்ப பயன்படுவது இயல்பு. தமிழகத்தில் விநியோகிப்பாளர்கள் இல்லை. புத்தகக் கடைகள் குறைவு. பல முக்கியமான நூல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதில்லை; ஆனால் தேவை உள்ளது. பதிப்புத் தொழிலுக்கு வருபவர்கள் பெரிய முதலீட்டுடன் வருவதில்லை. எந்த நூல் விற்பனையாகும் என்பதை முன்னுணர முடிவதில்லை. அதிகம் விற்பனையாகிவிட்டாலும் இளம் படைப்பாளிகளுக்குப் பிரசுர வாய்ப்பை உருவாக்கவேண்டிய கடப்பாட்டைப் பதிப்பாளர்கள் உணர்கிறார்கள். இப்படி பல காரணங்களால் தமிழ்ச் சூழலில் பிஓடி தழைக்கிறது.
 
இரண்டு முக்கியமான எதிர்மறை அம்சங்களும் தென்படுகின்றன. எழுத்தாளரிடம் பணம் வாங்கி நூல்வெளியிடும் பதிப்பாளர்களுக்கு எழுத்தாளர்களை ஏமாற்ற விரும்பினால் இது சிறந்த வழி. ஐந்நூறு பிரதிகள் தயாரிப்பதாகச் சொல்லிப் பணம் வாங்கிவிட்டு ஐம்பது பிரதிகள் மட்டும் அச்சிட்டு ஏமாற்றிவிடலாம். 
 
நூலக முறைகேடுகளுக்கு இது ஏதுவான தொழில்நுட்பம். வெளியிடாத நூல்களை வெளியிட்டதுபோல நூலகத்துறைக்கு காட்டிக்கொண்டு நூலக ஆர்டருக்கு விண்ணப்பிக்க பிஓடி வழிசெய்கிறது. சந்தைக்கு வராத, சந்தைப்படுத்தவே முடியாத நூல்கள் இன்று நூலகங்களை நிறைத்திருப்பதற்கு முக்கிய காரணம் பிஓடி தொழில்நுட்பம்தான்.
 
தொழில்நுட்பங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. அதை எப்படி பயன்படுத்துவது என்பது நம் கையில்தான்.
 
 
காலச்சுவடில் மிக அதிகமாக விற்பனை ஆன நூல்களில் முதல் ஐந்தைச் சொல்ல முடியுமா?
 
1.சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை'. ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பதிப்புகள் வெளிவருகின்றன. விற்பனையில் முதல் ஐந்து இடத்தில் தொடர்ந்து இடம்பெறுகிறது.
 
2. பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'. வெளிவந்த ஆண்டிலேயே( 2010) ஒரு பதிப்பு சென்னை புத்தகச்சந்தையில் விற்றுத் தீர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக வேறு எந்த ஒரு தமிழ் நூலை விடவும் சென்னை புத்தகச்சந்தையிலும் அதற்கு அப்பாலும் விற்பனையாகிறது.( ஊடகங்களில் இதன் விற்பனை, அரசியல் காரணங்களுக்காக இருட்டடிப்பு செய்யப்படுகிறது).
 
3. சி.சு.  செல்லப்பாவின் 'வாடிவாசல்'. 1959 செல்லப்பா வெளியிட்டபின்னர் முதல்முறையாக தனி நூலாக காலச்சுவடு 2003இல் வெளியிட்டது. இதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இரண்டு அல்லது மூன்று மறுபதிப்புகள் வெளியாகின்றன.
 
4. தொ. பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள்( 2001). இந்நூல் மட்டுமல்ல இதைத்  தொடர்ந்து காலச்சுவடு வெளியிட்டுவரும் தொ.பா.வின் நூல்கள் அனைத்துமே விற்பனையில் முன்னணியில் உள்ளன.
 
5. தகழி சிவசங்கரப்பிள்ளையின் 'தோட்டியின் மகன்' (மொழிபெயர்ப்பு சுந்தர ராமசாமி) (2000) பேச்சுவாக்கில் ஒரு நாள் சுரா இப்பணியை மேற்கொண்டதையும் 'சரஸ்வதி'யில் தொடராக வெளிவந்ததையும் தெரிவித்தார். மொழிபெயர்ப்புப் பணி முழுமை பெறவில்லை என்ற எண்ணத்தில் இருந்தார். புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி நூலகத்திற்குச் சென்று நான் பார்த்தபோது மொழிபெயர்ப்பு முழுமை பெற்றிருப்பது தெரிந்தது. ஆனால் அங்கு ஒரு இதழ் மட்டும் இருக்கவில்லை. பின்னர் மதுரை கர்ணனிடம் இருப்பது தெரிந்து அதையும் பெற்று நூலாக வெளியிட்டோம். 1951/52இல் மொழிபெயர்க்கப்பட்டு, 1958/59இல் சரஸ்வதியில் வெளிவந்த தொடரை, அதிலும் ஆசிரியர் தகழி - மொழிபெயர்ப்பாளர் சுரா,  இடதுசாரிகளுக்கு உவப்பான ஒரு  நாவலை,  நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடும் வாய்ப்பு வேறு எந்த மொழியிலும் ஒரு பதிப்பகத்திற்குக் கிடைத்திருக்காது. இதுவரை பதினைந்து பதிப்புகள் வெளிவந்துவிட்டன.
 
 
உங்கள் புத்தகங்களின் அட்டை, உள்ளடக்கம், வடிவமைப்பு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறீர்கள். இதில் பங்களிக்கும் ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் குழு பற்றிச் சொல்லமுடியுமா?
 
நூல் அட்டையும் ஒரு படைப்பு. நூலின் இன்றியமையாத ஒரு பகுதி. ஓவியக் கலைஞர்கள் வடிவமைப்புக்குக் கலைஞர்கள் இணைந்து நூலுருவாக்கத்தில்  செயல்பட வேண்டும். இந்த எண்ணமும் செயலும் சிறுபத்திரிகை மரபில் இருந்தது. காலச்சுவடு இந்த நம்பிக்கையை முன்னெடுத்தது. பல்வேறு காலங்களில் பல பல ஓவியர்கள் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். தனியாக குழு என்று இருந்ததில்லை. கைக்கெட்டிய எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. மூத்த ஓவியக்கலைஞர்களுடனும் பணியாற்றினோம்; புதியவர்களையும்  உருவாக்கினோம். தமிழகச் சூழலுக்கு அப்பாலும் சில கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். 
 
 
சர்வதேச புத்தகக் கண்காட்சிகளில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பதிப்பாளர் என்கிற வகையில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
முக்கியமாக பிராங்பர்ட், லண்டன், பாரிஸ் புத்தகச்சந்தைகளில் கலந்துகொண்டிருக்கிறேன். பிராங்பர்ட் புத்தகச்சந்தையில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளாகக் கலந்துகொள்கிறேன். புதிய அனுபவங்களும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. அவற்றை நம் சூழலுக்குப் பொருத்திப்பார்த்து உள்வாங்கிக்கொள்வதும் செயல்படுவதும் முக்கியம். காலச்சுவடைப் பொறுத்தவரை இந்த அனுபவங்கள் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரவும் தமிழ் இலக்கியத்தை உலக மொழிகளுக்குக் கொண்டு செல்லவும் சர்வதேசப் புத்தகக்கண்காட்சிகள் இன்றிமையாதவையாக உள்ளன. இன்று இந்தியாவில் பொதுநூல்களை வெளியிடும் வேறு எந்த ஒரு இந்திய மொழி பதிப்பகத்தை விடவும் காலச்சுவடு உலகச் சந்தையில் வேகமாகச் செயல்படுகிறது என்பது ஒரு தகவல், சுய தம்பட்டம் அல்ல. இவ்விஷயத்தில் இந்திய மொழிப் பதிப்பகங்களையும் பெரும்பாலான ஆங்கிலப் பதிப்பகங்களை விடவும் காலச்சுவடு ஊக்கத்துடன் செயல்படுகிறது.
 
 
-முத்துமாறன் ( அந்திமழை ஜூன் 2019 இதழில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...