நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி!
Posted : திங்கட்கிழமை, டிசம்பர் 06 , 2021 10:56:17 IST
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், டெஸ் தொடரை 1-0 கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி.நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் தராமல் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 540 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து, 400 ரன்கள் பின்தங்கியிருந்தது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் அஷ்வின், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 167 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் அஷ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட், அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.