முக்கிய 8 நகரங்களில் வீடுகள் விற்பனை 51 சதவீத வளர்ச்சி!
Posted : வியாழக்கிழமை, ஜனவரி 06 , 2022 10:47:39 IST
கடந்த 2021-ஆம் ஆண்டில் முக்கிய 8 நகரங்களில் வீடுகள் விற்பனை 51 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததாக நைட் ஃபிராங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நைட் ஃபிராங் இந்தியா நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் வீடுகளின் விற்பனை கடந்தாண்டில் 2,32,903-ஆக இருந்தது. இது, முந்தைய 2020-ஆம் ஆண்டின் விற்பனையான 1,54,534 வீடுகளுடன் ஒப்பிடும்போது 51 சதவீதம் வளர்ச்சியாகும்.
வீடுகள் விற்பனை அதிகரித்த போதிலும் அதற்கான தேவை கொரோனா பேரிடருக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோன்று, வீடுகள் விற்பனை உச்சத்தில் இருந்த 2011-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வீடுகளுக்கான தேவை 35 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த 2021-இல் வீடுகளின் விலையைப் பொருத்த அளவில், சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் முறையே 7 சதவீதம், 5 சதவீதம், 4 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. மும்பையில் குடியிருப்புகளின் விலை 1 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.
அதேசமயம், டெல்லி-என்சிஆா் பகுதியில் வீடுகளின் விலை 1 சதவீதம் அளவுக்கு குறைந்தும், கொல்கத்தா, புணே நகரங்களில் மாற்றமின்றியும் இருந்ததாக தெரிவித்துள்ளது.