அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -08: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   23 , 2022  10:38:20 IST


Andhimazhai Image

நாய் வளர்க்கும் அனேகரிடம் ஒரு பழக்கத்தைக் கவனித்திருக்கிறேன். மிகவும் பாசமாக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொட்டி ஒரு நாயை வளர்ப்பார்கள். பின்பு மொக்கைக் காரணங்களுக்காக அந்த நாயை விற்று விடுவார்கள் அல்லது கைவிட்டு விடுவார்கள். அந்த உரிமையாளரின் அந்த நேரத்துக் குழப்பமா இல்லை நாயின் கெட்ட நேரமா என்று தெரியாத வகையில் இப்படியான பிரிவு நிகழ்ந்து விடுவதுண்டு. இதில் சம்பந்தப்பட்டவரின் குடும்பமும் பணிச் சூழ்நிலையும் மிக முக்கியம். வளர்ப்புப் பிராணிகளை விரும்பும் நபர்களின் குடும்பத்தினர் எல்லா சமயமும் அதே மனப்போக்கை எதிரொலிப்பது இல்லை. 'குழந்தைகளை கவனிப்பதில்லை; ஆனால் இந்த பிராணிகளுக்கு அதிகநேரம், பணம் செலவழிக்கிறார்', 'குழந்தைகளும் நாய் பின்னாடியே சுற்றுகிறார்கள்', 'விலங்குகளுடன் பழகியதால் குழந்தைக்கு உடல்நலம் இல்லாமல் போய்விட்டது' போன்ற பல குறைகள் மனைவிமாரிடம் உண்டு. பல நேரங்களில் இவை நியாயமான ஆதங்கங்களாக இருப்பதும் உண்மை. எங்கள் வீட்டிலும் மிகவும் நெருக்கடியான காலங்களில் வளர்ப்புப் பிராணிகளுக்குக் கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவம் குறித்தும் நான் கூட சண்டை போட்டிருக்கிறேன்.  

இப்படி ஒரு நிகழ்வில் தான் பிரவுனி பாதிக்கப்பட்டது. இரண்டு முறை நல்லபடியாக குட்டிகளை ஈன்றிருந்தது பிரவுனி. அப்போது என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை திடீரென்று ஒருமுறை வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டிருக்கிறது. வீட்டுச் சூழலும் உவப்பானதாக இல்லை; அதனால் பிரவுனியை எலக்ட்ரீஷியன் கோபால் டூ வீலரில் வைத்து ஊருக்கு நான்கு கிலோமீட்டர் தள்ளி, வெட்ட வெளியில் விட்டுவிட்டு வந்துவிட்டார். அவர் திரும்பி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் சரியான மழை பிடித்துக் கொண்டது. அவ்வளவாக மழை பெய்யாத எங்கள் ஊரில் மழை பெய்ததாலா இல்லை மனது சரியில்லாததாலா தெரியவில்லை, தங்கள் வீட்டிற்குப் போகாமல் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார் கோபால்.

 எங்களிடம், "பிரவுனிக்கு நாலு நாளா லூஸ் மோஷன்.. எனக்கும் வெளியே வேலை ஜாஸ்தியா இருக்கு; பாக்க முடியலை.. வீட்லயும் ஒரே பிரச்சனை. அதனால அவுட்டர்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டேன்" என்றார்.

"என்ன? நெஜமாவா சொல்றீங்க?" என்று அதிர்ந்து போனோம் நாங்கள். உடனடியாகக் காரை எடுத்த என் கணவர், "ஏறுங்க கோபால்!" என்று அவரை வற்புறுத்தி காரில் ஏற்றி நாயை விட்டு வந்த இடத்திற்குச் சென்றார். அங்கு மழையில் நனைந்தபடி, அவர் விட்ட அதே இடத்தில் அப்படியே அசையாமல் நின்றிருக்கிறது பிரவுனி. அருகில் ஒதுங்க இடம் இருந்தும் ஒதுங்கவில்லை. நனைந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. 'அதன் கண்களில் அப்படி ஒரு மிரட்சி இருந்தது. அந்தப் பார்வையை இன்று வரை என்னால் மறக்கவே முடியவில்லை' என்று இப்போது வரை சொல்கிறார் என் கணவர்.

 அப்படியே இருவரும் சேர்ந்து அதைக் காரில் ஏற்றி எங்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டனர். பழைய துணிகளால் பிரவுனியைத் துடைத்து விட்டோம். இளஞ்சூடாகப் பால் கொடுத்தோம், குடிக்கவில்லை. பின் அப்போது அடிக்கடி செய்து பழக்கமாகிவிட்ட  வழக்கமான சிகிச்சையான ஊசி, மாத்திரை, குளூக்கோஸ் என்று இறங்கிவிட்டோம்..  

நாங்கள் பயந்தபடிக்கு இல்லாமல் இரண்டு நாள் சிகிச்சையிலேயே நல்ல முன்னேற்றம் தென்பட்டது. கோபால் கூட, "நல்ல வேளை சார்.. பார்வோ வைரஸா இருக்குமோன்னு நினைச்சு பயந்துட்டேன்.. ப்ளூட்டோவுக்கு ஆன மாதிரி ஆனா என்னால பாக்க முடியாது. அதான் கொண்டு போய் விட்டேன்" என்றார். நல்ல வேளையாக வேறெதோ ஒரு வீரியம் குறைந்த தொற்றாக அது அமைந்துவிட்டது.

 அடுத்த ஒரு வாரம் வரை பிரவுனியை நாங்களே வைத்திருந்தோம். கோபாலின் ஏழு வயது மகன் ப்ரித்திவ் அடிக்கடி அதை வந்து பார்த்துச் சென்றான். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மறுபடியும் சண்டை வருமா, டாக்டர் மாமா கஷ்டப்பட்டு காப்பாத்தி வச்சிருக்கார், இப்ப போய்  எங்க நாயை எங்களுக்குத் தாங்கன்னு எப்படி கேக்குறது என்று அந்தச் சின்ன மூளைக்குள் பல எண்ணங்கள் ஓடுவது எனக்கு நன்றாகப் புரிந்தது. "இப்ப நல்லா ஆயிடுச்சுடா பிரவுனி.. உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறியா?" என்றவுடன் உற்சாகமாகத் தலையாட்டி விட்டான். அந்த மொத்த நாட்களிலும் ப்ளூட்டோ பிரவுனிக்கு நாங்கள் கொடுக்கும் சிகிச்சைகளை எட்ட நின்று பார்த்தான்; எட்டி எட்டிப் பார்த்தான். அவனுக்கும் தொற்று வந்துவிடுமோ என்று பயந்து நாங்கள் சற்றுத் தள்ளியே இருக்குமாறு கூறியிருந்ததைப் புரிந்து கொண்டிருந்தான். பிரவுனி குணமாகிச் சென்றதில் அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

ஆனால் அதன் பின்னும் பிரவுனியை கோபால் அதிக நாட்கள் வைத்திருக்கவில்லை. சீக்கிரமாக வெளியூரில் ஒருவருக்கு விற்றுவிட்டார். 'ஏன் இப்படி?' என்று நாங்கள் கேட்க, "சின்ன பிரவுனி இப்ப நல்ல வளர்ந்துடுச்சுக்கா.. செல்வா வீட்ல இருக்கு.. அடுத்து அதை நாம மேட்டிங்குக்கு யூஸ் பண்ணிக்கலாம்" என்றார். என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவரும் 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுபவர்' தான். நாய்களை தினமும் குளிப்பாட்டுவது, ஊட்டமான உணவளிப்பது என்று எங்களை விட ஒருபடி மேலே கவனிப்பவர் தான். இருந்தும் ஒரு சமயம் கணக்குப் போட்டும், ஒருசமயம் பாசத்துடனும் அவர் அணுகும் விதம் எனக்குக் குழப்பத்தைத் தந்தது. "இப்ப ஒரு ராஜபாளையம் நாய் சொல்லி வச்சிருக்கேன்.. அது வந்துரும்" என்றார். மாற்றம் ஒன்றே மாறாதது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்து ஒரு மேட்டிங் சீசன் வந்தபோது ப்ளூட்டோவுக்கு இணை தேடி அலைந்தோம். சின்ன பிரவுனிக்கு ஒரு வயது ஆகியிருந்தது. அது எப்படி இருக்கிறது, என்ன ஏது என்று அவ்வப்போது விசாரித்துக் கொள்வோம். இங்கே தான் இருக்கிறது, இல்லை அங்கே போய்விட்டது இப்படி அது குறித்து குழப்பமான செய்திகள் வந்து சேர்ந்தன. பின்னொரு நாளில் சின்ன பிரவுனி அது வசித்த காலனியில்  வேகமாக சாலையைக் கடக்கையில் ஒரு வண்டி இடித்து, அதன் பின் சில நாட்கள் கழித்து இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டோம். அது மிகவும் குட்டியாக இருக்கையில் தான் தாங்கள் பார்த்தது. அதற்குப்பின் அதை சந்திக்கவில்லை. சின்ன பிரவுனி இறந்த தகவல் தாமதமாகவே வந்தாலும் மனதில் ஒரு வருத்தம் இருந்து கொண்டே தான் இருந்தது.

அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒரு பெண் லேப்ரடார் வைத்திருக்கிறேன். மேட்டிங்கிற்கு ஆண் கிடைக்குமா என்று கேட்க, அந்த ஊருக்கு இரண்டொரு முறை காரில் பயணமாகித் திரும்பினான் ப்ளூட்டோ. அந்தப் பயணங்களே பிறிதொரு காலத்தில் ப்ளூட்டோ காணாமல் போவதற்கும் அதைத் தேடி நாங்கள் அலைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்திற்கும் காரணமாக அமைந்தன.

 என்னுடைய இரண்டாவது பிரசவம், அதன்பின் சில மாதங்களில் மேற்படிப்பு என்று நான் பரபரப்பாக இருந்த நிலையில் என் கணவர் புறாக்கள், முயல்கள் என்று வேறு சில உயிர்களையும் வளர்க்க ஆரம்பித்தார். ஜீராஸ் என்ற வகையில் இரண்டு புறாக்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. கருப்பு நிற முயல் ஒன்றும் பிரவுன் நிற முயல் ஒன்றும் வளர்த்தோம். நாய்களுக்கு ஆங்கிலப் பெயர் வைத்து விட்டதால் கருப்பையா, மண்ணம்மாள் என்று தூய தமிழ்ப் பெயர்களை முயல்களுக்குச் சூட்டினோம். வீட்டில் ஏற்கனவே சிறிய அளவில் இரண்டு மீன் தொட்டிகள் இருந்தன. இப்போது புதிதாக, பெரிதாக ஒன்று சேர்ந்து கொண்டது.

நான் மேற்படிப்பிற்காக வெளியூரில் இருந்த போது ஒரு 'கிரேட் டேன்' (Great Dane) நம் வீட்டிற்கு வரப் போகிறது என்றார் என் கணவர். கிரேட் டேன் என்று ஒரு நாய் வகை இருப்பதை அன்று தான் கேள்விப்பட்டேன். அது பார்க்க எப்படி இருக்கும் என்று கேட்டேன். பெயரைத் தட்டியவுடன் கடகடவென்று தகவல்களையும், புகைப்படங்களையும் கொட்டும் இன்றைய இணைய காலம் போல் இல்லை அது. "கிரேட் டேன்னா பாட்ஷா படத்தில் வருமே அந்த நாய்" என்றார் என் கணவர். ரவுடிகளுடன் கேங்க் லீடர் பக்கத்தில் இருக்கிற நாய் என்றால் பயங்கர ஆக்ரோஷமானதாக இருக்குமோ என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் குழந்தைகளுடன் குழந்தையாக, ரொம்ப ரொம்ப பாசக்கார பயபுள்ளையாக இருந்தது எங்களுடைய முதல் கிரேட் டேன். ப்ளூட்டோவுக்கு அடுத்தபடியாக நீண்ட நாட்கள் எங்களுடன் இருந்தவன் என்ற பெயர் அந்த கிரேட் டேனுக்குக் கிடைத்தது. எங்கள் மருத்துவ அறிவுக்கு ஒரு சவாலாகவும் அந்த கிரேட் டேன் தன் வாழ்நாளில் அமைந்தது. அது குறித்து.. அடுத்த வாரம்..

(அதற்கு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று ஊகிக்க முடிந்தவர்கள் சொல்லுங்கள்... editorial@andhimazhai.com. )

(மருத்துவர் அகிலாண்டபாரதி எழுதும் இந்த தொடர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகும்)

முந்தைய  பகுதிகள்:

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -01: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -02: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -03: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -04: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -05: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -06: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -07: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...