அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் அதிகாரி 0 சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர் 0 விக்டோரியா கவுரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு 0 டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது மத்திய குழு 0 சென்னை உயர்நீதிமன்றம்: 5 நீதிபதிகள் பதவி ஏற்பு! 0 கர்நாடக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் களம்! 0 அதானி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் 0 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்துடன் டெல்லி புறப்பட்டார் அதிமுக அவைத்தலைவர்! 0 கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த வேண்டும்: அண்ணாமலை விருப்பம் 0 சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 0 திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல: திருமாவளவன் 0 மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி 0 வாணியம்பாடி: இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு 0 பாஜகவிற்கு அதிமுக ஒன்றுபட்டால்தான் கொண்டாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் 0 பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -05: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   01 , 2022  13:11:31 IST


Andhimazhai Image

ஏற்கனவே ப்ளூடோ இருந்ததாலும், எங்கள் முதல் குழந்தையின் வரவை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்ததாலும் ஜூபிட்டரின் வருகைக்கு அதிக பரபரப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ப்ளூட்டோ வரவிருந்த காலத்தில் ஒரு நாளைக்கு நான்கு முறை 'எப்ப வரும்' என்று கேட்டது போலல்லாமல் இப்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, 'எப்படி இருக்குதாம் நம்ம ஜூபி? எப்ப வருதாம்?' என்று கேட்டு வந்தேன்.

"மத்த நாய்க்குட்டிகள் எல்லாத்தையும் குடுத்துட்டாராம்.. நம்ம குட்டி மட்டும் இன்னும் ரெண்டு வாரம் அம்மாகிட்ட பால் குடிச்சிட்டு வரட்டும்னு சொல்லிட்டேன். அப்ப தான் நல்ல இம்யுனிட்டி கிடைக்கும்" என்றார் கணவர். சரிதான் கூட ஒரு மாதமே ஆகட்டும் என்று நானும் கூறிவிட்டேன். ஒரு நாய் போதாதா என்ற முணுமுணுப்பும் வீட்டில் மற்றவர்களிடம் இருந்தது.

நல்லதொரு நாளில் ஜூபிடரை அந்த உரிமையாளரே கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். அன்றே என் கணவர் கூறினார், "இது நான் செலக்ட் பண்ணின நாய் இல்லையே.. அதைத் தரேன்னு சொல்லிட்டு இவர் வேற யாருக்கோ வித்திட்டார் போல.. இது வேற" என்றார். எனக்கு எல்லா குட்டிகளும் ஒன்று போலத்தான் தெரிந்தது. வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.

"சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது அவங்க சரியா சாப்பாடு போட்டுருக்க மாட்டாங்க.. நாம இனிமே கவனிச்சு தேத்திடலாம்" என்றேன்.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது எப்படி உண்மை இல்லையோ அதேபோல் நாய் வளர்க்கிறவன் எல்லாம் நல்லவனாக இருப்பான் என்பதும் உண்மை இல்லை என்பது எனக்கு அப்போது புரிந்தது. நாய்க்குட்டியை மாற்றித்தான் கொடுத்திருக்கிறார் அந்த நபர். அடிக்கடி வந்த உடல் உபாதைகளுடன் ஜூபிடர் கொஞ்சம் சோப்ளாங்கியாகவே வளர்ந்தான்.

அவனுக்குப் பயிற்சி கொடுக்கும் பொறுப்பை ப்ளூட்டோ ஏற்றுக்கொண்டான். வேலைப்பளுவும் வேறு பல பொறுப்புகளும் சேர்ந்துகொள்ள, எங்களால் ப்ளூட்டோவுக்குக் கொடுத்த அளவிற்கான கவனத்தை ஜூபிட்டருக்குக் கொடுக்க முடியவில்லை. ப்ளூட்டோவிற்கு ஒரு வயது நிரம்பியிருந்தது. அதற்குள் அவன் பல கலைகளையும் கற்றுக்கொண்டு விட்டான் அவனைத் தேடி பக்கத்துத் தெரு, பக்கத்து ஏரியாவில் இருந்த எல்லாம் சிறுவர்கள் வர ஆரம்பித்தனர். வந்து ப்ளூட்டோ என்று அழைத்து கொஞ்சிப் பேசிவிட்டுச் சென்றனர். எங்கள் தெருவின் நாட்டாமையாக அவன் மாறுவதற்கான சகல அறிகுறிகளும் தென்பட்டன. அநாவசியமாகக் குரைக்க மாட்டான், ஒரு முறை நாங்கள் அறிமுகப்படுத்திய மனிதர்களை அடுத்த முறை எப்போதுமே அவன் மறந்ததில்லை. அவன் குரைக்கிறான் என்றால் அதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

இப்படியான ஒரு நாளில் தான் மிகப் பெரிய சாகசம் ஒன்றைச் செய்தான் ப்ளூட்டோ. அன்று இரவு சுமார் பத்தரை மணி இருக்கும். இருபது நிமிடங்களுக்கு மேலாக விடாமல் குரைத்துக் கொண்டிருந்தான் ப்ளூட்டோ. தேவையில்லாம குறைக்க மாட்டானே என்று வெளியே வந்து பார்த்தோம். தெருநாயும் இல்லை, பூனையும் இல்லை, திருடனும் இல்லை. பின்னரும் என்ன, என்று அருகில் செல்ல முயன்றார் என் மாமனார். ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி அவரை அவன் விடவே இல்லை. எதிலிருந்தோ தடுப்பவன் போல் தடுத்தான். பின் நாங்களும் நெருங்கிப் பார்க்க, அவனது குரைப்பு சத்தம் அதிகமானது.

"அனேகமா பாம்பா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு எங்கள் அனைவரையும் வீட்டுக்குள் அனுப்பிய என் கணவர் அருகில் போய் எட்டிப் பார்த்தார். மாடிப்படி இருக்கு கீழே உள்ள சிறிய இடத்தைத் தான் ப்ளூட்டோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரையும் அருகில் விடவில்லை. ஒரு பெரிய கம்பையும் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு அவர் சென்றபோதுதான் அவனே வகுத்த  அந்த எல்லைக்கோட்டைத் தாண்டி அவரைச் செல்ல அனுமதித்தான். டார்ச் லைட்டினைப் பாய்ச்சிய என் கணவர் அதிர்ந்தே போனார். மிகப் பெரிய நல்ல பாம்பு படம் எடுத்தபடி அமர்ந்திருந்தது. அவர் அதுவரை பார்த்திருந்த பாம்புகளிலேயே அதுதான் மிகவும் நீளமானது என்றார். சுமார் ஆறரை அடி இருக்கும்.

சீக்கிரம் கேமராவைக் கொண்டு வா என்று என்னிடம் அவர் சத்தம் கொடுக்க, நானும் வீட்டில் இருந்த டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன். அவரது கேமரா மொபைலை ப்ளூட்டோ ஸ்வாகா செய்ததைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன் அதுவுமில்லாமல் அன்றைய மொபைல் போன்கள் டிஜிட்டல் கேமரா அளவிற்குத் தெளிவான புகைப்படங்களை எடுக்கவில்லை. அந்த நல்ல பாம்பை புகைப்படம் எடுத்தவர் எங்களிடம் கேமராவை கொடுக்க, அதைப் பார்த்த நாங்களும் அதிர்ந்து போனோம்.

உடனடியாக நான் தீயணைப்புத்துறைக்குத் தொலைபேசியில் அழைத்தேன். வந்தவர்கள் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, 'எங்களில் யாருக்கும் பாம்பு பிடிக்கும் அனுபவமில்லை. அதற்கான பயிற்சி எடுத்தவர் இப்போது இல்லை. வேண்டுமானால் இன்னும் நான்கு பேரை சேர்த்துக் கொள்ளலாம், அடித்துக் கொன்று விடுவோம்' என்று கூறினர். அரவம் கேட்டு கூறிவிட்ட அண்டை வீட்டினருள் சிலரும் சில நாட்களுக்கு முன்பாக ஒரு பெரிய பாம்பைப் பார்த்தோம், அது இதுவாக இருக்கலாம் என்று கூறினார்கள்.

என் கணவருக்கு அதைக் கொல்வதற்கு மனதே இல்லை. வீட்டு விலங்குகள் மட்டுமல்லாது அனைத்து உயிர்களின் மேலும் அபரிமிதமான அன்பு செலுத்துபவர் அவர். "ஒரு பாம்பு இவ்வளவு நீளம் வளர்ந்திருக்குன்னா, எவ்வளவு பெரிய ஆபத்தான சூழ்நிலைகளை, எத்தனை வருஷம் தாண்டி வந்திருக்கணும்.. அதை நம்ம கையால சாகடிக்கக் கூடாது. பிடிச்சுக்கொண்டு போய் ஏதாவது காட்டுப்பகுதியில் விடணும்" என்றார். எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த மிகப்பெரிய காலி மனையைப் பற்றிக் கூறியிருக்கிறேன். அங்கு புதரும் செடி கொடியுமாக இருந்தது. அங்கிருந்து தான் இந்தப் பாம்பு வந்திருக்க வேண்டும். மனிதர்கள் தாராளமாகப் புழங்கும் இடத்தில் இவ்வளவு நாட்கள் யார் கண்ணிலும் படாமல் வளர்ந்ததும் அடிவாங்காமல் தப்பித்ததும் பெரிய விஷயம் தான்.


நாங்கள் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அந்தப் பாம்பைப் பிடித்து ஒரு சாக்குப் பையில் அடைப்பதற்கான முனைப்பில் இறங்கிவிட்டார். இன்னொரு நீளமான கம்பையும், தேங்காய் உரிக்கும் கம்பியையும் தயார் செய்துவிட்டு ப்ளுட்டோவையும் ஜூபிடரையும் அழைத்துக்கொண்டுபோய் பின்னாலிருந்த பாத்ரூமில் அடைத்தார். அவர் பாதுகாப்பு உபகரணங்களுடன் களமிறங்கி விட்டார் என்ற நம்பிக்கை வந்த பின்தான் ப்ளூட்டோ ஜுபியை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அக்கம்பக்கத்தினரும் தீயணைப்புத் துறையினரும் உடனிருக்க, ஒற்றை ஆளாக என் கணவர் அந்தப் பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக சீறிப் படமெடுத்த அந்தப் பாம்பு அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து போய் விட்டது. படம் எடுப்பதை விட்டுவிட்டு தலையைத் தொங்கப் போட்டது.

'எங்கள் இருவருக்குமான போட்டியில் என்னை சிறந்தவன் என்று அது ஏற்றுக் கொண்டு விட்டது. உன்னை நான் காயப்படுத்த மாட்டேன் என்ற நம்பிக்கையை அதற்கு ஏற்படுத்தியிருக்கிறேன். அதனால் அதைப் பிடித்து காட்டில் விடுவேன்' என்றார். அக்கம்பக்கத்தினர், என் மாமியார், மாமனார் உட்பட அனைவரும் சாக்குல எல்லாம் பிடிக்க வேண்டாம். எவ்வளவு பெரிய பாம்பு, நிச்சயம் நிறைய விஷயம் இருக்கும், கடித்தால் ஆபத்து என்று கெஞ்சாத குறையாக வற்புறுத்தினர். என் கணவர் கேட்கவே இல்லை.

இவன் என்னை கொல்ல மாட்டான் அப்படிங்கிற நம்பிக்கைல அது பணிஞ்சிருக்கு. அதனால நிச்சயம் கொல்லக்கூடாது என்று வாதாடினார். தலையைக் கீழே போட்டுவிட்டு சாதாரணமாக ஒரு கயிற்றைப் போல் படுத்திருந்த பாம்பை அந்த நீளக் கம்பினால் தூக்கி சாக்குப் பையினுள் வைத்தார் என் கணவர்.

தீயணைப்புத்துறையினர் இன்னொரு சாக்கைக் கொண்டுவந்து கொடுக்க, அதற்குள் முதல் சாக்கை வைத்துக் கட்டினார். அதன்பின் அவர்கள் அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு நாங்கள் கொண்டு செல்கிறோம் என்று தூக்கிச் சென்றனர். இவர் நானும் துணைக்குப் போக போகிறேன் என்றார். கூடவே கூடாது என்று நாங்கள் பிடிவாதமாகத் தடுத்து விட்டோம்.

இன்னமும்கூட அந்தப் பாம்பு எங்காவது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கலாம், அல்லது 'காட்டில் எல்லாம் கொண்டுபோய் விடமாட்டாங்க, இங்கே எங்கேயாவது அதை அடிச்சுக் கொன்னுடுவாங்க' என்று எங்கள் அக்கம்பக்கத்தினர் கூறியது போலவும் நடந்திருக்கலாம்.

 ஆனால் இன்று வரை, "நீங்கதான் என்னை தடுத்துட்டீங்க.. நானே கொண்டு போய் அதை பத்திரமா காட்டில் விட்டிருப்பேன். ஃபயர் ஸ்டேஷனுக்கு நீ ஃபோன் பண்ணிருக்கவே கூடாது" என்றுதான் என் கணவர் கூறிக் கொண்டு இருக்கிறார். அவ்வளவு சாமர்த்தியமாக இந்த விஷயத்தை ப்ளூட்டோ அணுகவில்லை என்றால், அன்றோ இல்லை அதற்கு அடுத்த சில நாட்களுக்குள்ளோ யாராவது ஒருவர் அந்தப் பாம்பால் கடி வாங்கியிருக்கக்கூடும்.

 அதன்பின் ஓரிரு முறை பாம்புகளை நாங்கள் எதிர்கொண்ட நேரங்களிலும் அதை முதலில் சுட்டிக்காட்டியது ப்ளூட்டோ தான். அவனது குரைப்பு சத்தத்தின் தன்மையை வைத்து ஆரம்பத்திலேயே காரணத்தைக் கண்டுபிடித்தோம். அந்த சமயங்களிலும் கம்பு சகிதமாக நாங்கள் களமிறங்கி விட்டோம் என்றால், அதற்குத் துணையாக வளரும் ஒன்று அல்லது இரண்டு ஜூனியர் நாய்களை அதே பாத்ரூமுக்கு கூட்டிக்கொண்டு போய் பாதுகாப்பாக அமர வைத்துத் தானும் அமர்ந்து கொள்வான். 'முதல் நாள் இதே மாதிரி பாத்ரூம்ல அடச்சோமே அதே ஞாபகத்தில் இப்ப அவனே போயிட்டான், எவ்வளவு அறிவு' என்று சிலாகிப்பார் என் கணவர். எங்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ப்ளூட்டோ.

அந்த பார்வோ வைரஸ் வயிற்றுப்போக்கு கண்டத்திலிருந்து ப்ளூட்டோ மீண்ட பின் அவனுடைய ஆரோக்கியம் சீராகவே இருந்தது. சரியான நேரங்களில் தடுப்பூசிகளையும் குடற்புழு மாத்திரைகளும் கொடுத்தோம். ஒரு சமத்துக் குழந்தையின் அருகில் வளரும் சேட்டைக்காரக் குழந்தையாக  ஜூபி இருந்து வந்தது. தெரிந்து செய்த சேட்டைகள் சில என்றால், தெரியாமல் நிறைய. ஒருமுறை கார் சாவியை கடித்துவிட்டது. அதன்பின் காரை இயக்கவே முடியவில்லை. வேறு ஒரு சாவி ஆர்டர் செய்து வாங்கினோம். அடிக்கடி பாலிதீன் பையை சாப்பிட்டது. எங்கே போகிறது, எப்போது சாப்பிட்டது என்பதே தெரியவில்லை. மலத்தில் பாலிதீன் வெளியேறியபின் தான் அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. என் குழந்தையின் துணிகளைக் கடித்து வைத்தது. கண்ட இடத்தில் மலம் கழித்தது. ஜூபியை வேற யார்கிட்டயாவது குடுத்துடலாம் என்று அடிக்கடி என் மாமியார் வலியுறுத்தினார்.

ஜூபியின் பழக்கவழக்கங்களா, இயல்பிலேயே அதற்கு எதுவும் பிரச்சனையா, அல்லது எங்களுக்கே தெரியாமல் அதன் மேல் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டினோமா என்று தெரியவில்லை.. ஜூபி எங்களுடன் அதிக நாட்கள் இருக்கவில்லை.

அது குறித்து.. அடுத்த வாரம்...

(மருத்துவர் அகிலாண்டபாரதி எழுதும் இந்த தொடர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகும்)

முந்தைய  பகுதிகள்

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -01: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -02: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -03: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -04: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...