அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பறவையைப் போல் வாழ்ந்தவன் பிரான்சிஸ் கிருபா!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   30 , 2021  23:01:29 IST


Andhimazhai Image

கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது மூச்சை நிறுத்திக் கொண்டார். அவரையும், அவரின் படைப்புகளையும் நினைவு கூறும் விதமாக ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ என்ற தலைப்பில் குதிரைவீரன் பயணம் வாசகர் வட்டம் நேற்று (செப்டம்பர் -29) நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தது. இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த படைப்பாளிகள் மட்டுமில்லாது, பல்வேறு நாடுகளை சேர்ந்த படைப்பாளிகளும், வாசகர்களும் பங்கேற்றுப் பேசினர்.

 “அடிக்கடி இரங்கல் கூட்டங்களில் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியமான ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். ஒரு இரங்கல் கூட்டத்தில் இருந்து கொண்டு, மற்றொரு இரங்கல் கூட்டத்திற்கான அறிவிப்பை சொல்ல வேண்டிய கொடும் காலமாக இது இருக்கின்றது” என எழுத்தாளர் கவின் மலரின் பேச்சுடன் நிகழ்வு தொடங்கியது. நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பேசியிருப்பினும் அவற்றில் சில முக்கியமான உரைகளை மட்டும் இங்கே தொகுத்து தருகிறோம்,

 

ஸ்டாலின் சரவணன்

 
ஒவ்வொருவருக்கும் கவிதை எழுதுவதற்கான தருணம் எப்போதாவது தான் வரும். நான் (கிருபா) அமாவாசை மற்றும் பௌர்ணமி வரும் நாட்களில் மனம் மிகுந்த மன கொந்தளிப்புடன் இருப்பேன். அதே போன்ற தருணம் உனக்கும் வரும். அந்த தருணத்தை நீ கண்டடைந்து, அப்போது கவிதை எழுதினால் அது மகத்தான கவிதையாக இருக்கும் என்பார் கிருபா.

 
முழுக்க முழுக்க கவிதையைப் பற்றிய சிந்தனை தான் கிருபாவுடையது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக கிருபா கே.கே.நகரில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். மிகவும் சிறிய அறை அது. கிருபா வெளியே சென்றுவிட்டு அறைக்கு வந்தார் என்றால், சட்டைப் பாக்கெட்டிலிருந்தும், பேண்ட் பாக்கெட்டிலிருந்தும், சட்டை மடிப்புகளிலிருந்தும் துண்டு சீட்டுகளை எடுத்து கீழே போடுவார். அது அத்தனையும் கவிதைகளாக இருக்கும்.

 
அறையில் இருக்க கூடிய கதவில், சிகரெட் அட்டைகள் என பல்வேறு இடங்களில் கவிதைகளை எழுதி வைத்திருப்பார். கவிதை தான் கிருபாவின் வாழ்க்கையில் பெரிய அங்கமாக இருந்த ஒன்று.

 
கிருபாவிடம் நெருங்கவும் முடியாது, விலகவும் முடியாது. அப்படிப்பட்டது அவருடைய தன்மை. அவர் மருத்துவமனையில் இருந்த போது, மருத்துவமனைக்கு வந்த மென்பொறியாளர் பெண் ஒருவர், கிருபாவை இரண்டு நாட்கள் தாயைப் போன்று பார்த்துக் கொண்டார். இந்த பெண்ணைப் போன்ற பலர் கிருபாவை எழுத்தின் வழியாகவே கண்டடைந்தனர். ஆனால், கிருபா இதை எல்லாவற்றையும் கடந்து சென்றிடுவார்.

 

கிருபா எழுதி தொலைத்த கவிதைகள் அதிகம். கிருபாவின் கவிதைகளில் இருந்த எளிமைதான், அவரை பலரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. கிருபா கற்பனையின் உச்சத்திலிருந்து கவிதைகளை எழுதியிருப்பார். அவருடைய வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான். அவரின் படிமங்கள், சொற்கள் வித்தியாசமானவை. கிருபாவின் கவிதைகளில் தாள நயம் இருக்கும்.

 
கிருபா காதலைப் பற்றி எழுதும் போது ஒரு மொழியும், காமத்தை பற்றி எழுதும் போது ஒரு மொழியும் அவருக்கு கிடைத்ததாக நினைக்கிறேன்.

 

கிருபாவின் கவிதைகளில் காமம் ஒரு உறைந்த மௌனமாக இருக்கும். ஆனால், அது காதலில் குழைவாக இருக்கும். காதலை எழுதும் போது மன்றாடி எழுதுவார். அவரின் எல்லா கவிதைகளிலும் உச்சம் தொட்டிருப்பார். காலத்தால் அழியாத கவிதைகளை கிருபா எழுதியிருக்கிறார் என்றே சொல்ல முடியும்


 வாசுதேவன்

 
கிருபாவின் கன்னி நாவல் என்னை மிகவும் பாதித்த நாவல். அது தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அந்த கட்டுரையைப் படித்துவிட்டு ஒருகூட்டத்தில் என்னை சந்தித்த போது கட்டிப்பிடித்து அழுதார் கிருபா.

 

தன்னுடைய அடுத்த நாவலை நானும் யூமா வாசுகியும் வெளிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கன்னி நாவலை நான் நான்கைந்து பேருக்கு பரிசளித்திருக்கிறேன்.

 
அவர் தன்னுடைய கடைசி காலத்தில் ஒரு நாவல் ஒன்று எழுதிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.

 
அவருடைய நாவல் வடிவம் மிகச்சிறந்தது. தமிழில் ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு எழுத்து முறையைக் கையாண்டிருக்கின்றனர். புதுமைப்பித்தனின் பாய்ச்சல் நடை, மௌனியின் பூடகமான எழுத்து, கி.ரா-வின் வட்டார வழக்கு, கோணங்கியின் சிக்கலான எழுத்து அதுபோல, கிருபாவின் எழுத்து ஒரு கிறிஸ்துவ தமிழ். இது அபூர்வமான ஒன்று.

 

கிருபாவின் வாழக்கை பின்புலத்தை யாரும் பேசவேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவரின் உலகம் மிகவும் வேறுபட்ட ஒன்று. அவரின் உலகத்தை யாரும் பார்த்ததில்லை. கிருபா அவருடைய வாழ்க்கையில் கண்ணாடியைப் பார்த்ததேயில்லை. அவரின் வீட்டில் முகக் கண்ணாடி இல்லை என்கிறார்கள் அவருடன் பழகிய நண்பர்கள்.

 

கடவுள் தனக்கு விருப்பமானவர்களை சீக்கிரம் அழைத்துக் கொள்வார், ஷெல்லி, பாரதியார் போன்றவர்களின் வரிசையில் கிருபாவும் சென்றுவிட்டார்.

 
அ. மார்க்ஸ்

 

பிரான்சிஸ் கிருபாவின் மரணம் எல்லோரையும் பாதித்திருக்கிறது என்பதை அவரின் மறைவுக்குப் பிறகு எழுதப்படும் அஞ்சலிக் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது.

 

அவரின் மரணம் எதிர்பார்த்த ஒன்று தான். அவரின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த முடிவை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்தார் என்று கூட சொல்லலாம். அவரின் வாழ்க்கையோடு தான் அவரை புரிந்து கொள்ள வேண்டும். திரைப்படங்களில் பாடல், வசனம் எழுதியிருந்தாலும்  கூட அவருக்கு போதுமான அளவுக்கு வருமானம் இருந்ததில்லை.

 

உரைநடையை விட அவருக்குக் கவிதை மிக இயல்பானதாக இருந்திருக்கிறது. தர்க்கங்களை மீறுவது என்பது தான் கவிதையின் தனி சிறப்பே. அவரின் கவிதைகளில் மட்டுமல்ல அவரின் வாழ்க்கையிலும் தர்க்கங்களை மீறியிருக்கிறார். எல்லாவற்றையும் பார்த்து மனம் கலங்கியிருக்கிறார்.

 

கிருபாவின் புத்தகங்களுக்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒரு விழா எடுத்ததாகப் படித்த சம்பவம் என்னுடைய மனதை நெகிழ வைத்தது.

 

பெருந்தேவி

 
கிருபாவின் பல கவிதைகள் கடவுளை, தேவனைப் பேசுகின்றன. கடவுள் தருகின்ற, தர மறுக்கின்ற அல்லது தாமதமாக தருகின்ற அல்லது கடவுள் தந்து ஏக்கமாகிவிட்ட கருணை என்று சொல்லலாம் கிருபாவின் கவிதைகளை. ஆனால், அதைத்தாண்டி கிருபாவின் கவிதையில் உள்ள கருணை இயற்கைக்கும் மனிதனுக்கும் அறுபடாத நிலை. இரண்டும் சேர்ந்து ஓரிருப்பாக செயல்படுகிறது. இயற்கையின் ஓரிருப்பாக மனிதனை வைத்துக் கொள்பவை கிருபாவின் கவிதைகள்.

 

கிருபாவிற்கு நாம் செய்யக்கூடிய அஞ்சலியாக நான் நினைப்பது அவருடைய கட்டுரைகளைத் தொகுப்பாக கொண்டு வரவேண்டும்.

 

 கே.என்.செந்தில்


கவிஞராக அறிமுகமாகி பிறகு நாவலாசிரியரானவர். தமிழ் நவீன கவிதைகளில் படிமங்கள் ஏறக்குறைய பின்னோக்கிவிட்ட காலத்தில், கிருபா உள்ளே வருகிறார். அவரின் கவிதைகள் படிமச் செறிவுகளுடன் இருக்கின்றது. தேவதேவன் கவிதைகளில் உள்ள படிம தொடர்பு கிருபாவின் கவிதைகளில் காணலாம். முதல் தொகுப்பிற்குப் பிறகு பிரான்சிஸ் கிருபா நிறைய கற்றுக் கொண்டார் என்று சொல்லாம். அது அவரின் அகத்தைப் பிரதிபலித்தன எனலாம்.

 

கவித்துவமான மொழி நடை கொண்ட நாவல் என கன்னியை சொல்லமுடியும். கன்னி நாவலில் வரும் பாண்டிக்கு, ஆசைப்பட்ட வாழ்க்கைக்கு மாறாக வேறு ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறான். அந்த வீழ்ச்சியின் பிரதிபலிப்பாக அவன் உளவியல் சிக்கலுக்கு ஆளாக்கப்படுகிறான். அந்த சிக்கலின் வழியாகவே கன்னி நாவல் சென்றுக் கொண்டிருக்கிறது. கன்னி மிகச் சிறப்பான காதல் நாவல்.

 

 கு.உமாதேவி

 
பிரான்சிஸ் கிருபாவை கவிதைகள் வழி தான் அறிந்தேன். நந்தன் ஸ்ரீதரன் கிருபாவை பற்றி மிகச் சரியாக எழுதியிருந்தார். கிருபா உயிரோடு இருந்தபோது அவரை சந்திக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி இப்போது மேலெழுந்திருக்கிறது.

 
அவரின் வாழ்க்கை மிக அழகானது. யாரையும் தொந்தரவு செய்யாமல், யாருக்கும் சுமையாக இல்லாமல் ஒரு பறவை மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தவர் கிருபா. எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை மிகச் சரியாக வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

 

 உதயசங்கர்

 
தமிழில் காதலைப் பற்றிப் பேசுகிற, அதையும் தாண்டி பேசுகிற நாவல் கன்னி. நிறைய உள் அர்த்தங்களை உள்ளடுக்குகளை வைத்திருக்கக் கூடிய சிறந்த நாவல்களில் ஒன்றாக கன்னி திகழ்கிறது. கன்னி நாவலின் முதல் நூறு பக்கங்கள் இதுவரை தமிழில் எழுதப்படவில்லை, இனிமேலும், அப்படி எழுதப்பட முடியுமா என்பது சந்தேகமே.

 
நிகழ்வுகளுக்கு இடையே சிலர் கவிதை வாசிக்க, சிராஜூதின் நன்றி தெரிவித்து நிகழ்வை நிறைவு செய்தார். 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...