![]() |
ஆப்கானின் முன்னாள் அமைச்சர்...இன்று டெலிவரி பாய்!Posted : சனிக்கிழமை, ஆகஸ்ட் 28 , 2021 14:41:47 IST
![]()
“எந்த தொழிலாக இருந்தாலும் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். உயர்ந்த வேலை, தாழ்ந்த வேலை என எதுவும் இல்லை. எனவே, இந்த வேலையை செய்வதில் வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ கிடையாது” என்ற இந்த வார்த்தைகளைப் பலமுறை பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஆஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப அமைச்சருமான சையது அகமது ஷா சதாத் கூறியிருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தகவல் தொடர்பியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டங்களைப் பெற்ற சதாத், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 23 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர். மேலும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் சில ஆண்டுகாலம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த சதாத், அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தன்னுடைய அமைச்சர் பதவியை கடந்த 2018இல் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2020ஆம் ஆண்டு வெளியேறத் தொடங்கியது. இதனால், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது குடும்பத்தினருடன் ஜெர்மனியில் குடியேறினார். தொழில்நுட்ப நிறுவனங்களில் சதாத்துக்கு வேலை செய்ய தகுதிகள் இருந்தும், ஜெர்மன் மொழி தெரியாத காரணத்தால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குடும்பத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாத காரணத்தால், ஜெர்மனியின் லிவ்ராண்டோ என்ற நிறுவனத்தில் பீட்சா டெலிவரி செய்யும் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்வதற்காக சதாத் சைக்கிளில் சென்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அவரை புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில், அமைச்சராக இருந்த ஒருவர், இன்று டெலிவரி பாயாக இருக்கிறாரே என பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து சையது சதாத் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “எந்த தொழிலாக இருந்தாலும் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். உயர்ந்த வேலை, தாழ்ந்த வேலை என எதுவும் இல்லை. எனவே, இந்த வேலையைச் செய்வதில் வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ கிடையாது. இப்போது மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஜெர்மனியில் இருப்பதை மிகவும் பாதுகாப்பானதாக உணர்கிறேன். பணத்தை சேர்த்து வைத்து ஜெர்மன் படிக்கலாம் என்று இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
|
|