அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 100 
|
இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 , 2020 05:39:44 IST
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தையும், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஃபாகிர் சந்த் கோஹ்லி நேற்று (நவம்பர் 26) காலமானார். அவருக்கு வயது 96.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த கோஹ்லி, இந்தியாவில் இன்று, 191 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வளர்ந்துள்ள ஐடி-ஐடிஎஸ் சேவைத் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவராவார். இந்தியாவின் கண்கவர் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கும், இன்று நாம் அனுபவிக்கும் நவீன பொருளாதாரத்திற்கும் அடித்தளத்தை அமைத்து கொடுத்தவரும் அவரே.
மார்ச் 19, 1924 ஆம் ஆண்டு, பெஷாவரில் பிறந்து வளர்ந்த கோஹ்லி பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். இந்திய அரசின் உதவித்தொகையுடன் 1946 - ல் கனடாவுக்கு சென்ற கோஹ்லி, அங்கு கிங்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மின் பொறியியல் படித்தார். தொடர்ந்து, 1951 இல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1951 ஆம் ஆண்டில் டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த கோஹ்லி, டாடா குழுமத்துடனான தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதன்பின் 1970 இல் டாடா எலக்ட்ரிக் நிறுவனங்களின் இயக்குநரானார்.
நிறுவனத்திற்காக சிறந்த பணிகளைச் செய்த கோஹ்லி 1999 இல் டிசிஎஸ்ஸில் இருந்து ஓய்வு பெற்றார், இருப்பினும் அவர் நிறுவனத்தின் கெளரவ ஆலோசகராக தொடர்ந்தார்.
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு, தொழில்துறை அமைப்பின் தலைவராக இருந்த எஃப்.சி.கோஹ்லிக்கு அஞ்சலி செலுத்திய போது, ”கோஹ்லி, தொழில்நுட்ப சேவைகளில் இந்தியாவுக்கான வாய்ப்பை முன்பே கண்டறிந்து சொன்ன தொலைநோக்குத் தலைவர். பல தசாப்தங்களுக்கு முன்பே இந்தியாவில் தொழில்நுட்ப பிரிவில் எந்தவொரு நிறுவனங்களும் இல்லாதபோதே டிசிஎஸ் நிறுவனத்தை தொடங்கியவர். அவரது தலைமையும் ஆர்வமும் இந்தியாவை உலகளாவிய நிறுவனங்களுடன் நம்பகமான, தரமான தொழில்முறை உறவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. கோஹ்லி தனது முன்னோடி பங்களிப்புகளுக்காகவும், நாஸ்காமில் குறிப்பிடத்தக்க தலைமைக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்று கூறியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், “கோஹ்லி ஒரு உண்மையான சகாப்த மனிதர், அவர் இந்தியாவின் கண்கவர் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கும், இன்று நாம் அனுபவிக்கும் நவீன பொருளாதாரத்திற்கும் அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார். மேலும், டி.சி.எஸ்ஸில் தான் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து கோஹ்லியுடன் பணிபுரியவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தனக்கு பாக்கியம் இருந்ததாக கூறியுள்ளார்.
இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "எதிர்காலத்தை கணித்து, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையை கட்டியெழுப்பிய ஒரு முன்னோடி. அவரது எண்ணங்களையும் ஆலோசனையையும் நாங்கள் இழந்துள்ளோம்” என்று கூறினார்.
“இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சோகமான நாள். அவர் டி.சி.எஸ்ஸின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமல்ல, இந்தியாவின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்” என்று டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரி சி.பி.குர்னானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்ட ஃபாகர் சந்த் கோஹ்லி பத்ம பூஷன் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
- சு. கார்த்திக் சுந்தர்
|
|