இந்தியாவுடனான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க பார்ல் பகுதியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகியுள்ளார். ஷ்ரேயஸ் ஐயர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியிருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர் மலானை 6 ரன்களில் பும்ரா வெளியேற்றிய நிலையில், டி காக்கை 27 ரன்களில் போல்ட் செய்தார் அஸ்வின். டெஸ்ட் தொடரில் சொதப்பிய மார்கிரம், 4 ரன்களில் ரன் அவுட் ஆகி அணியை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தெம்பா பவுமா, வான்டர் டூசன் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாண்டனர்.
ஒரு புறத்தில் பொறுப்புடன் விளையாடிய பவுமாவும் மறுமுனையில் அதிரடி காட்டிய டூசனும் சதத்தை பூர்த்தி செய்தனர். இறுதியாக, 143 பந்துகளில் 110 ரன்களை எடுத்த பவுமா, பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். 50 ஓவர்கள் முடிவில், நான்கு விக்கெட் இழப்புக்கு தென்னாப்பிரிக்கா 296 ரன்களை எடுத்தது. ஆட்டம் இழக்காமல் டூசன் 129 ரன்களை எடுத்தார்.
இந்திய சார்பாக, பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
297 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 51 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழக்க தவானும், விராட் கோலியும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.