மது யாஸ்கி கௌட்
மது யாஸ்கி கௌட்

10 ஆண்டு ஆட்சியில் 10 அநீதிகள்: பட்டியலிட்ட காங்கிரஸ் செயலாளர் மது!

அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான மது கவுட் யாக்சி, அகில இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்பு ஊடக தமிழக பொறுப்பாளர் பாவ்யா நரசிம்மமூர்த்தி ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கடந்த 10 ஆண்டுகள் அநீதியான காலம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

”பத்தாண்டு ஆண்டு கால அநீதியான, அநியாய பா.ஜ.க ஆட்சி, நமது மக்களையும் நமது ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு தலைதூக்கியுள்ள வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் தகர்த்துள்ளது. தாங்க முடியாத விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடின உழைப்பால் சேமித்தது கரைந்து போனது. வருமானம் சமத்துவமின்மை உச்சத்தில் உள்ளது. ஒரு சில கோடீசுவரர்களின் இந்த ஆட்சியைக் கைப்பாவையாக்கி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

எஸ்சி.,எஸ்டி.,ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கு திட்டமிடப்பட்டு பாகுபாடு காட்டப்படுகிறது. விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அனைத்து தன்னாட்சி நிறுவனங்களின் கழுத்து நெரிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.

எதிர்க்கட்சி எம்பிக்களை ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்துவிட்டு சட்டம் இயற்றப்படுகிறது. சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்கியதின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கை, வெற்றுப் பேச்சுகள், விளம்பர ஸ்டண்ட்கள், பகட்டான நிகழ்வுகள் மற்றும் நிறுவனங்களை நாசப்படுத்துவதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது.” என்று அவர்கள் கூறினர்.

அநீதிகளாக இருவரும் பட்டியலிட்டவற்றின் பட்டியல் விவரம்:

1. இந்திய இளைஞர்களுக்கு வேலையின்மை

* 2012 ஆம் ஆண்டு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் 3 மடங்காக அதிகரித்து 4 கோடியாக உயர்ந்துள்ளது.

* வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் அதிகமாக உள்ளது. 3 பட்டதாரிகளில் ஒருவர் வேலை தேடுகிறார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

2. விலைவாசி உயர்வு

* பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சிஎன்ஜி, மாவு, பருப்பு, அரிசி, சமையல் எண்ணெய், பால் என அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன.

* அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளது.

3. விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதிப்பு

* மோடி அரசு கொண்டு வந்த 3 கறுப்புச் சட்டங்கள், விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் தெருவில் நின்று போராட வைத்தன. இந்தப் போராட்டத்தில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர்.

* 2022 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குறைந்தது ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.

4. நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான பாகுபாடு

( எஸ்சி., எஸ்டி., சிறுபான்மையினர்), சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை

* 2013 ஆம் ஆண்டிலிருந்து தலித்துகளுக்கு எதிரான குற்றம் 46.11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

* 2013 ஆம் ஆண்டிலிருந்து பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 48.14 சதவீதம் அதிகரிப்பு

* சாதிவாரிக் கணக்கெடுப்பிலிருந்து மோடி அரசு ஓடுவது ஏன்?

5. பெண்களுக்கு எதிரான கொடுமை - மகளைக் காப்போம் என்பது குற்றவாளிகளைக் காப்போம் என்று மாறிவிட்டது!

* தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என தேசிய குற்ற ஆவண அமைப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 51 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

* பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பா.ஜ.க. விடுதலை செய்கிறது. பிரிஜ்பூசன் ஷரன் சிங், செங்கார் உள்ளிட்ட பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் குற்றவாளிகளையும் பா.ஜ.க. பாதுகாக்கிறது.

6. பொதுச் சுகாதாரம் மற்றும் தவறாகக் கையாளப்பட்ட கொரோனா தடுப்பு

* திட்டமிடாமல் திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் 4 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றனர்.

* கொரோனா அலை குடும்பங்களைப் பிளவுபடுத்தியதோடு, இறந்த உடல்கள் கங்கையில் மிதந்த நிகழ்வுகளும் நடந்தன.

* உலக சுகாதார மதிப்பீட்டின் படி, கொரோனா அலையில் நாடு முழுவதும் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது, மோடி அரசு காட்டும் தரவுகளை விட 10 மடங்கு அதிகம். அதோடு, உலக அளவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் 3 -ல் ஒரு பங்கு.

7. குறு,சிறு,நடுத்தர தொழில்கள் மற்றும் ஜிஎஸ்டி/ தோல்வியடைந்த மேக் இன் இந்தியா திட்டம்

* பொருளாதாரத்தில் உற்பத்தியின் பங்களிப்பு 2014 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வீழ்ச்சி 13 சதவிகிதமாக இருக்கிறது.

* சீனாவிலிருந்து உதிரிபாகங்களை வாங்கிவந்து மொபைல் போன்களை உற்பத்தி செய்கிறோம். இதை மேக் இன் இந்தியா என்கிறார்கள்.

* திட்டமிடாத மோசமான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

8. ஏழைகள் மீது போர்/ சமத்துவமின்மை/ பெரும் பணக்காரர்களின் அரசு/ பொது நிறுவனம்

* துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் ஏகபோக உரிமையை அளித்துவிட்டு, இந்தியாவை அதானி கொள்ளையடிக்க பிரதமர் மோடி உதவியுள்ளார். அதானியால் மின் நுகர்வோருக்கு அதிக கட்டணம் விதிக்கப்படுகிறது. திருடப்பட்ட பணத்தை செபியின் பார்வைக்கு பங்குச் சந்தை விலை உயர்ந்தது போல காட்டப்படுகிறது. இவ்வாறு 32 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளது.

* 1 சதவிகித பெரும் பணக்காரர்கள் இன்றைக்கு நாட்டின் 40 சதவிகித சொத்துகளை பெற்றுள்ளனர். அதேசமயம் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் வெறும் 3 சதவிகித சொத்துகளை மட்டுமே பெற்றுள்ளனர்.

9. சீனா/அக்னிவீர்/தீவிரவாதம்

* நமது எல்லையில் யாரும் நுழைய முயற்சிக்கவும் இல்லை, நுழையவும் இல்லை என்று 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சீனாவுக்கு நன்சான்றிதழ் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இது நமது ராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். 18 முறை ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எல்லை ஊடுருவல் என்பது இந்தியாவின் நிலையைப் பாதித்துள்ளது. இந்தியாவின் எல்லையில் 2 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீன ஆக்கிரமித்துள்ளது.

* பிரதமரின் அக்னிபத் திட்டம் ஆயுதப்படையைப் பலவீனப்படுத்தும் என்று முன்னாள் ராணுவ தளபதி எம்எம்.நரவானே கூறியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துவதோடு, இந்திய இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதைக் குறைக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

* காஷ்மீரில் சகஜ நிலை ஏற்பட்டுள்ளதாக வெற்று பேச்சுகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நமது ராணுவ வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல தீவிரவாதிகள் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

10. ஜனநாயகப் படுகொலை-ஜனநாயகம் தகர்ப்பு!

* பண பலத்தைப் பயன்படுத்தியும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ புலன் விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை மிரட்டி அருணாச்சலப் பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநில அரசுகளை பா.ஜ.க. கவிழ்த்தது. கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 95 சதவிகித அமலாக்கத்துறை வழக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* இந்திய தேர்தல் ஆணையத்தில் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க.மற்றும் பிரதமர் மோடி மேற்கொள்ளும் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

* குற்றவியல் நடைமுறைகளை மாற்றியமைக்கும் சர்ச்சைக்குரிய 3 சட்டங்களைக் கொண்டு வருவதற்காக 146 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தியா எதார்த்தத்தைப் பார்க்க மோடி அரசும் பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை.

ஆனால், நமது தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இணைந்து, எதிர்வரும் 2024 தேர்தலையொட்டி, சக்திவாய்ந்த குரலை ஒலித்தே ஆக வேண்டும் என்பதை இன்றைக்கு இந்தியா உணர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com